Monday, February 4, 2013

கடல்


இப்போதெல்லாம் ஒரு தமிழ் படம் வெளியாகி இரண்டு காட்சிகள் திரையிடபட்டுவிட்டாலே, அந்த படத்தை பற்றி ஒரு பொது அபிப்பிராயம் சமூக வலைத்தளங்களில் உருவாக்கி அளிக்கப்பட்டு விடுகிறது. அதற்க்கு பிறகு, அந்த படங்களை பார்ப்பவர்களும், ஏற்கனவே உருவான அபிப்பிராயங்களை ஒட்டியே, தமது கருத்தை கட்டமைத்துக் கொள்கிறார்கள். இதன் மூலம், தமது ரசனை மற்றவர்களுடன் ஒத்து போவது குறித்து உள்ளுர மனஅமைதி அடைகிறார்கள். அபூர்வமாக கடல் படம் பலரை குழப்பத்தில் ஆழ்த்திருக்கிறது. முதலில் உருவான செம மொக்கை, கடல் போன்ற ஒற்றை வார்த்தை விமர்சனங்கள் வந்து கொண்டிருந்த போதே, படம் பார்த்த வெகு சிலரால் சிலாகிக்கப்பட்டு நமது ஒற்றை வார்த்தை விமர்சகர்களை தீரா குழப்பத்தில் விட்டிருக்கிறது.பெரும்பாலும் நான் இணையத்தில் உருவாகி அளிக்கபடும் விமர்சனங்களை கருத்தில் கொள்வதில்லை. வெளிவரும் ஒரு படத்தை நான் பார்க்க போகிறேன் என்று முடிவு எடுத்துவிட்டால், இந்த விமர்சனங்களில் இருந்து தள்ளி நிற்பதே எனது வழக்கம். திரைப்பட ரசனை அனைவருக்கும் பொதுவானதல்ல என்பது எனது எண்ணம்.கடல் திரைப்படம் வெறும் கண்களை மட்டும் கொண்டு உணரபட வேண்டிய படம் அல்ல. இது செவிப்புலனின் துணை கொண்டு அணுக வேண்டிய படைப்பு. படத்தின் ஒவ்வொரு வசனமும், கதையை நிகழ்த்தி செல்கிறது என்பதை உணரவில்லையென்றால், படம் புரியாது தான். நன்மைக்கும் தீமைக்கும் நடக்கும் ஆடு புலி ஆட்டம் இது. முழுக்க, முழுக்க நன்மையே தமது குணமாக கொண்ட அரவிந்தசாமிக்கும், பாவத்தின் ரூசியை கண்டுக்கொண்ட அர்ஜுனுக்கும் இடையிலான போராட்டமே இந்த படம். இதுவே படத்தின் மையம். இதில் பகடைகாய்களாக உருட்டபடுவது நாயகன் தாமஸும், நாயகி பியாட்ரிஸும். இந்த உலகம், உருவான நாள் முதல் உள்ள கேள்வி, எது மனிதனின் இயற்க்கையான குணம் என்பதுதான். தீமைதான் மனிதனின் இயல்பா? நன்மை என்பது அவன் போர்த்திக் கொள்ளும் வேடமா? இந்த கேள்விதான் இலக்கியத்தின் மையம். இந்த கேள்வியை முன்னிறுத்தியே மதங்கள் பேசுகின்றன. வினாக்கள் எழுப்ப்படுகின்றன.

கோடானுகோடி முறை, அறங்களும், விழுமியங்களும் திரும்ப திரும்ப, அறநெறி நூல்களாலும், மதங்களாலும் வலியுறுத்தப்படுகிறது. ஆனாலும் மனிதனை தீமையின் கரங்களிடமிருந்து முழுவதுமாக விடுவிக்க முடியவில்லை என்றால், தீமையின் மீது மனித மனம் கொள்ளும் ஈர்ப்புக்கு எது அடிப்படை? தீமைதான் மனிதனின் இயல்பா?  


இந்த கேள்வியை கேட்காத இலக்கிய படைப்புகள் இல்லை. கடல் படத்தின் சாம் ஃபெர்னாண்டஸ் (அரவிந்தசாமி) பாத்திரம், கரம்ஸோவ் சகோதரர்களின் ஃபாதர் அல்யேஸாவின் பிரதி அல்லவா?  சாமை விட பெர்க்மான்ஸ் (அர்ஜுன்) அறிவாளி என்பது படத்தில் தொடர்ந்து முன்வைக்க படுகிறது. இங்கு உங்களுக்கு, அறிவு என்பது சாத்தானின் ஆயுதம் என்ற பழைய மேலைநாட்டு கோட்பாடு, உங்கள் நினைவுக்கு வர வேண்டும். அப்படி வந்தால், நீங்கள் இந்த படத்துடன் ஒன்ற முடியும். அர்ஜுனை, தாஸ்தோவேஸ்கியின் இவான் பாத்திரத்துடன் பொருத்தி பார்க்க முடிகிறதா? 

களங்கமற்ற தன்மை, அறிவாளிகளை விட அசடுகளுக்கே கைக்கூடும். எனவே அவர்களின் களங்கமற்ற தன்மையால், எளிதாக இயேசுவை நெருங்குவார்கள். சாம் பாத்திரத்தால், ஒருபோதும் தீமையை செய்ய முடியாது என்று படம் முழுவதும் நாம் உணர்கிறோம்.  இறுதியில், அவனுடைய களங்கமற்ற தன்மை, சாத்தானால் பரிசோதிக்கப்பட்டு உடைக்கபடுகிறது. பரிதாபமாக தோல்வியை தழுவுகிறான் சாம். புனிதனான சாம் தனது நற்குணத்தை இழந்து, பெர்க்மான்ஸை தண்ணீரில் முழ்க விட எத்தனிக்கையில், சாத்தான் வெற்றி களிப்பில் எக்காளமிடுகிறான்.  தேவதை போன்ற பியாட்ரிஸினால் மன்னிக்கப்பட்டு தேவனான தாமஸ்,  பெர்க்மான்ஸை மன்னித்து மீட்கிறான் இப்போது, மன்னிக்கப்பட்டு உயிர்தெழும் பெர்க்மான்ஸால், இயேசுவை மிக எளிதாக நெருங்க முடியும்தானே.

சமூகத்தில் நிராகரிக்கப்பட்டு, குற்றத்தின் ரூசியை மட்டுமே கண்டவனான தாமஸால் (கெளதம் கார்த்திக்), பியாட்ரிஸின் (துளசி) துணையால் கிருஸ்துவை நெருங்க முடிகிறது. தோமஸை 13 வருடம் வளர்த்த சாம் பாத்திரத்தால், தோமஸை புனிதமாக்க முடியவில்லை. நாயகி பியாட்ரிஸ், இனிமே செய்யாதே என்ற தனது ஒற்றை வார்த்தையால் அவனை இயேசுவின் சபைக்கு நகர்த்துகிறாள். பியாட்ரிஸின் களங்கமற்ற தன்மை அவளது அறியாமையை அடிப்படையாக கொண்டது. அந்த அறியாமையே, அவளை, சாமை விட புனிதமானவளாக ஆக்குகிறது என்று உங்களால் உணர முடிந்தால், நீங்கள் பார்த்து கொண்டிருப்பது வெறும் படமல்ல, பல்வேறு கேள்விகளை முன்வைக்கும் ஒரு மகத்தான நாவலாசிரியனின் நிராகரிக்க முடியாத படைப்பு என்பது புரியும்.அரவிந்தசாமிக்கும், சிறுவனான தோமஸ்க்கும் இடையிலான காட்சிகளை பார்க்கும் போது, திரும்பவும் எனக்கு கரம்ஸோவ் சகோதரர்களில்,  ஃபாதர் அல்யுஷாவிற்க்கும், சிறுவனான இல்யுஸாவிற்க்கும் இடையிலான காட்சிகள்தான் நினைவுக்கு வந்தன. நிச்சயம் ஜெயமோகனுக்கும், இந்த காட்சிகளை படைக்கும் போது, அவை நினைவில் இருந்திருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது.  

சமூகத்தின் கொடூரமான நிராகரிப்புக்கு ஆளாகும் சிறுவன் இல்யுஸா, தனக்கு நன்மை செய்ய முயலும் ஃபாதர் அல்யுஷாவின் விரல்களை கடித்து விரட்டுவான். இந்த படத்தில், சிறுவன் தோமஸிடம் டேப்ரிக்காடரை கொடுத்து என்ன பேச நினைக்கிறாயோ அதை பேசு என்று சொல்லும் போது, அவன் கெட்ட வார்த்தைகளால் கொட்டி தீர்க்கிறான். தொடர்ந்து அம்மாவை நினைத்து அழுகிறான். இந்த பதிவை பிறகு அரவிந்த்சாமி, நாயகி பியாட்ரிஸ்க்கு போட்டு காண்பிக்கும் இடம் ஒரு கவிதை.

ஒரு காட்சியில் தாமஸ், தனது காட்ஃபாதாரான அர்ஜுனை பார்க்க வருவார். அப்போது அர்ஜுன், யாருடனோ தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருக்கும் வசனமிது. பாவம் செய்றது, மனுசன் இயல்பா நடக்குற மாதிரி.. ஈசியா பழக்கிடலாம்.. நன்மை செய்றதுதான் வானத்துலே பறக்க செய்ற மாதிரி.. ரொம்ப கஷ்டம்.  இந்த வசனம்தான் படத்தின் மூலம். இதை தவறவிடுபவர்களால், படத்தை புரிந்துக் கொள்ள முடியுமா? அரவிந்தசாமிக்கும், அர்ஜுனுக்கும் அப்படி என்னதான்யா பிரச்சினை? என்று முகநூலில் ஒரு நண்பர் கேட்டிருப்பதை பார்த்தேன்.
அவருடைய பிரச்சினையை புரிந்துக் கொள்ள முடிகிறது. சாம், படத்தின் ஆரம்பத்தில் அர்ஜுனை மன்னிக்க மறுப்பதால், அர்ஜுனின் குடும்பமே தூக்கு மாட்டிக் கொண்டு அழிகிறது என்று ஒரு காட்சி வைத்திருந்தால் பாவம், நமது நண்பரால் படத்துடன் ஒன்றியிருக்க முடியுமோ, என்னவோ..படத்தின், குறைகள் என்று நான் கருதுவது, அர்ஜுன் பாத்திரத்தின் பின்புலத்தை விரிவாக சொல்லவில்லை என்பதைதான். குண்டடிப்பட்டு, சாமிடம் திரும்ப வரும் வரையிலான, அர்ஜுனின் கதையை, சில காட்சிகளில் சொல்லியிருந்தால், படம் எதை மையப்படுத்துகிறது என்பது இன்னும் தெளிவாக விளங்கியிருக்க கூடும். அர்ஜுனின் பாத்திர படைப்பில் ஆழம் குறைவு. கெளதம் கார்த்திக், துளசி இருவருமே நன்றாக செய்துள்ளனர். அரவிந்த்சாமியின் கருணைமிக்க கண்கள் இந்த பாத்திரத்துக்கு நன்றாக பொருந்துகிறது. 

ஓரளவேனும் கேள்விகளை கொண்டவர்களால், ஓரளவேனும் இலக்கிய ஈடுபாடு கொண்டவர்களால் நிராகரிக்கபட முடியாத, ஜெயமோகனின் காவியம் இது. ஜெயமோகனுக்கு போதுமான அளவு தளம் அமைத்து கொடுத்த மணிரத்னம் பாராட்டுக்குரியவர்.

11 comments:

 1. நல்ல புரிதல்..வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. தாமசு கதாபாத்திரம் புனித தாமஸின் சாயலோடும் ஒப்பிடலாம். குற்றமும் தண்டனையும் நாவலில் பாவங்கள் புரியும் நாயகன் ஒரு பெண்ணிடம்தான் சரணடைவான். அவளே அவனை பாவங்களில் இருந்து மீட்பாள். இந்த பதிவில் நீங்கள் குறிப்பிடத் தவறியது Luis Bunuel இயக்கிய காவியமான Nazarin படத்தை ஒத்த சில கதாபாத்திரங்கள் இந்த படத்திலும் வருகிறார்கள். ஆனால் இவையனைத்தும் மேல்பூச்சுகளே. இந்தப் படத்தை நான் நிராகரிப்பதன் காரணம் அடியில் விரவி ஓடும் வழக்கமான மசாலாத்தனங்கள். கடல் போன்ற எந்த ஒரு தமிழின் இரண்டாந்தர படத்துக்கும் இதே போன்ற சால்ஜாப்புகளை முன்வைக்க முடியும். நன்மை தீமை போராட்டங்கள் எல்லாம் நாங்கள் காலங்காலமாக பார்த்து சலித்தவை. அவற்றுக்கு தத்துவ சாயம் பூச முயன்று தோற்றுவிட்டார்கள் என்பதே உண்மை. மற்றபடி இது ஒரு காவியம் தமிழ்மக்களுக்கு ரொம்பவே புதுசு அதனால்தான் குழம்புகிறார்கள் என்பதெல்லாம் இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவை பட்டியலில் சேர வேண்டியவை

  ReplyDelete
  Replies
  1. குற்றமும் தண்டனையும் குறித்து நீங்கள் சொல்வது உண்மைதான். தத்துவ தளத்தில் இருந்து இந்த படத்தை பார்க்க தவறினால், குழப்பமே மிஞ்சும் என்பதுதான்
   நான் சொல்ல வந்தது. உதாரணமாக, நாயகியை கொன்ற வில்லனை, நாயகன் மன்னித்து காப்பதாக எந்த தமிழ் படத்திலும் வந்ததாக எனக்கு நினைவில்லை.
   இது சராசரி நாயகனின் கதை என்று வரும் ரசிகனுக்கு, இல்லை இது பேசும் தளம் வேறு என்று சொல்லவில்லையெனில், ஏமாற்றமே அளிக்கும். இதை எப்படி தத்துவ பூச்சு என்று சொல்கிறீர்கள் என்பது புரியவில்லை. இங்கு பேசப்படுவது நன்மையும், தீமையும் மற்றும் மன்னிப்பும் தானே. இதை புரிந்துக் கொள்ளாத
   ரசிகனை இந்த படம் திருப்திபடுத்தாதுதான். Thanks..

   Delete
 3. You complete me என்று டார்க் நைட் படத்தில் ஜோக்கர் பேட்மனிடம் சொல்வதாக ஒரு வசனம் வரும் சாத்தானால் கடவுளை கொல்ல முடியாது. கடவுள் இருந்தால்தானே சாத்தானுக்கு பொழுதுபோக்கே? அரவிந்தசாமியை அர்ஜுன் அதனாலதான் கொல்லாமல் விடுகிறார். ஆனால் ஏற்கனவே பல தமிழ்ப்படங்களில் எத்தனையோ மக்களை கொன்ற வில்லன் ஹீரோவை மட்டும் கொல்லாமல் விட்டுவிடுவார் .இந்த சராசரி காட்சிக்கு கடவுள் X சாத்தான் மேல்பூச்சு என்கிறேன். தாமஸ் சாத்தானை மன்னிப்பது தமிழுக்கு புதுசாக இருந்திருக்கும்.ஆனால் வழக்கம் போல கதாநாயகி இறந்துவிட்டது போல காட்டி பின்பு அவள் சாகவில்லை என்பது...சாரி பாஸ். இவை க்ளிஷேக்கள். இவற்றினால் தான் படம் சராசரிப் படமாகவே எஞ்சி மண்டியிடுகிறது. Please remove word verification..it will be difficult for people to comment,especially for those who type in mobile like me

  ReplyDelete
 4. விளக்கமான விமர்சனம்.....நான் பொதுவாக சினிமா பார்ப்பதில்லை...இந்த படம் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தால் உங்கள் விமர்சனம் மனதில் வந்து போகும்...

  ReplyDelete
 5. Nalla vimarsanam..neengal sonnathu polave,valai thalangalil varum avimarsangalai vaithae padangalai parpathu en vazhakkam! padathai paarkum bothu paditha vimarsanagalin baathippu nichayam irukave seigindrana...kadal padam paarkum bothu ungal vimarsanam nichayam en manathil vanthu pogum....

  ReplyDelete

Write your valuable comments here friends..