Sunday, October 27, 2013

வாழ்வின் மீது எழும் ஆசை - அசோகமித்திரனின் தண்ணீர் நாவல்

காலங்காலமாக சென்னையில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தை மையமாக எடுத்துக் கொண்டு நாவல் தொடங்குகிறது. அளவை மட்டும் வைத்து பார்த்தால் இது குறுநாவல் தான். ஆனால், இந்த நாவல் பேசும் விஷயங்கள்,தொடும் மையங்கள் மூலம் தமிழின் மிக சிறந்த படைப்புகளுள் ஒன்றாக தன்னை நிறுத்திக் கொள்கிறது. தண்ணீர் நாவல் 1971ல் அதாவது இன்றிலிருந்து 42 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது.



சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவும், மத்தியஸ்தர்கள் அல்லது கீழ் நடுத்தர  வர்க்கம் வாழும் சென்னையின் எத்தனையோ தெருக்களில் ஒன்றுதான் கதையின் மையம். மக்கள் ஒரு குடம் தண்ணீர்க்காக வீடு வீடாக அலைகிறார்கள். குடிக்கவே தண்ணீர் இல்லாத போது, குளிப்பது எல்லாம் எப்படி? கைபம்பில் துருவுடன் கலந்து பழுப்பு நிறத்தில் வரும் தண்ணீர்க்கு அடித்து கொள்கிறார்கள். நரகம் போன்ற வாழ்க்கையில் சபிக்கப்பட்டவர்களாக புழுக்களை போல் உழுலுகிறார்கள். ஃபிளஷ் அவுட்டில் போக செய்தால், தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பதற்க்காக, குழந்தைகளை தெருவில் மலம் கழிக்க செய்கிறார்கள். இந்த நிலையிலும், ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க முயலுகிறார்கள்.

மந்தையை பிரிந்த வெள்ளாடு ஜமுனா, சினிமா ஆசையில் பாஸ்கர் ராவ் என்பவனை நம்பி வாழ்க்கையை தொலைத்தவள். அவள் தங்கை சாயாவுடன் அந்த தெருவில் ஒரு மாடியில் குடியிருக்கிறாள். கட்டுபாடுகளுடன், கெளரவமாக வாழ முயலும் சாயாவின், கணவனோ மிலிட்டரியில் இருக்கிறான். பாஸ்கர் ராவ் வந்து கூப்பிடும் போதெல்லாம் ஜமுனா, தன்னை மீறி அவனுடன் போகிறாள். குடி, கும்மாளம் என்று அவனுடன் பொழுதை கழிக்கிறாள். பாஸ்கர் ராவ் மட்டுமே ஜமுனாவுக்கு ஒரு பெண், சமூகத்தில் ஒரு மனுஷி என்ற மதிப்பை அளிக்கிறான். சமூகத்தால் ஒதுக்கப்பட்டவளாக, உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவளாக வாழும் ஜமுனாவுக்கு, பாஸ்கர் ராவ் அளிக்கும் சிறிய மதிப்பும், உறவும் வேண்டியதாக இருக்கிறது. பழையபடி திரும்பி வந்து கழிவிரக்கத்தால் அழுகிறாள்.

இதனால், சாயா, அக்காவை பிரிந்து விடுதிக்கு செல்கிறாள். தனிமையால் சாகும் முடிவுக்கு செல்லும் ஜமுனாவுக்கு டீச்சரம்மா ஆறுதல் சொல்கிறாள். டீச்சரம்மா தன் கொடுமையான வாழ்க்கையை சொல்வதன் மூலம் ஜமுனாவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முனைகிறாள். பிறர் மீது கொள்ளும் அக்கறை மூலம், வாழ்வுக்கு அர்த்தம் ஏற்படும் என்று சொல்கிறாள். முதல் இரவிலேயே, தன்னுடைய கணவன் ஒரு நித்திய நோயாளி என்பது தெரிய வருகிறது. மனைவியை கட்டி அணைக்க முயன்று, முதல் இரவில், வலிப்பு வந்து துடிக்கும் கணவனை பார்த்தபடி நின்றதை விவரிக்கிறாள் டீச்சரம்மா.

பத்து வயது கூட நிரம்பாத இரு குழந்தைகள், ஒரு குடத்தில் தண்னீரை, தூக்க முடியாமல் தூக்கி கொண்டு செல்கிறார்கள்.
சாயாவிடம் சென்று கெஞ்சி, அவளை திரும்பவும் தனது அறைக்கு கூட்டி வருகிறாள் ஜமுனா. இருவரும் தனது மாமாவுடன் இருக்கும் அம்மாவை பார்க்க செல்கிறார்கள். அவர்களுடைய அம்மாவோ, படுத்த படுக்கையாக ஈர புடவையுடன் கிடக்கிறாள்.

புகுந்த வீட்டுக்கு வந்த நாலு மாதத்தில், இரண்டு படி பயறை ஊற போட்டு அரைக்க சொன்னா, எங்க மாமியா. பஜ்ஜிக்கு யாராவது இரண்டு படி பயறை போடுவாளா? இரண்டு படி பயறையும் நின்னுண்டே அரைச்சேண்டி என்று திரும்ப திரும்ப பிதற்றும் அந்த அம்மாவின் குரல் நமது மனதில் சொல்லவெண்னா துயரத்தை ஏற்படுத்துகிறது.

தெருவில் குடிநீர் குழாயுடன் கலக்கும், சாக்கடை நீரை அடித்து பிடித்து கொண்டு பிடிக்கிறார்கள் மக்கள். மழை நீரை இரவெல்லாம் முழித்திருந்து பாத்திரங்களில் பிடிக்கிறார்கள்.  

அக்காவும் தங்கையும் ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழலாம் என்று இருக்கையில், பாஸ்கர் ராவ் திரும்பவும் வந்து ஜமுனாவை அழைக்கிறான். தான் மூன்று மாதம் கர்ப்பம் என்று சொல்லி அவனை விரட்டுகிறாள் ஜமுனா. பொய்தானே என்று கேட்கும் தங்கையிடம் உண்மை என்று சொல்கிறாள். வாழ்க்கை குறித்த புதிய நம்பிக்கையுடன் இருவரும் தெருவில் இறங்கி நடக்கிறார்கள்.

இந்த நாவலில் தண்ணீர் பஞ்சம் என்பது ஒரு குறியீடுதான். வாழ்க்கையில் எத்தனையோ ஏமாற்றங்கள், நிராசைகள், மாற்றங்கள், தோல்விகள். இவ்வளவுக்கு பிறகும், வாழ்வின் மீது எழும் ஆசை, ஒரு விசித்திரம் தானே? தண்ணீர் குடத்தை தூக்க முடியாமல், காலில் போட்டுக் கொண்டு விழும் நிலையிலும், தனது மடி ஆசாரத்தை பிடித்து வைத்துக் கொள்ளும் அந்த மூதாட்டியை போல.

சாமனியர்களின் வாழ்க்கையை, தனது கூர்மையான மொழியால், அகழ்ந்து பார்க்கும் அசோகமித்திரன்,  இந்த நாவலில் வாழ்க்கை பற்றிய தனது அங்கத பார்வையையும், நம்பிக்கையையும் ஒருங்கே அளிக்கிறார். அசோகமித்திரன் தமிழின் தலை சிறந்த படைப்பாளி என்பதற்க்கு இந்த நாவல் ஒரு சிறந்த உதாரணம்.

நாவலை முடித்தவுடன், ஷவரை திறந்து கொட்டும் நீரை பார்த்தபடி நின்றிருந்தேன்.





1 comment:

  1. அருமை. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுக.

    ReplyDelete

Write your valuable comments here friends..