Tuesday, December 3, 2013

குடை நிழல் தந்த மமதை - தெளிவத்தை ஜோசப்

ஈழ எழுத்தாளர்களில், அ.முத்துலிங்கம், ஷோபாசக்தி இருவரது எழுத்துகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன். இருவரின் எழுத்துக்களிலும் எனக்கு பிடித்த பொதுவான விஷயம் அங்கதம் தான். அ.முத்துலிங்கம் தொடர்ந்து பல நாடுகளிலும் அரசாங்க உத்தியோகத்தில் இருந்திருக்கிறார். குறிப்பாக ஆப்பிரிக்காவில் பணி புரிந்திருக்கிறார். அந்த வாழ்க்கையில் கண்ட ஏற்றதாழ்வுகள், பார்த்த பலதரப்பட்ட மனிதர்கள், சுகதுக்கங்கள் தந்த பக்குவம், வாழ்வு குறித்து ஒரு எள்ளல் பார்வையை முத்துலிங்கம் அவர்களுக்கு வழங்கியிருக்கிறது. அதுவே எழுத்திலும் பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு கட்டுரையிலும் அந்த எள்ளல் குதித்தோடி நம்மை கட்டிபோடுகிறது.

ஷோபாசக்தியோ புலிகள் இயக்கத்தில் சில காலம் இருந்தவர். பிறகு சோஷலிச சிந்தனையில் உந்தப்பட்டு இயக்கத்தில் இருந்து விலகி,குடிபெயர்ந்தவர்.போராட்ட வாழ்வில் கண்ட தியாகங்கள், அபத்தங்கள்,பொருளற்ற இறப்புகள், தற்செயல்களே வரலாற்றை நிர்ணயிக்கும் காரணிகளாக,மாறும் அபத்தம் அவருக்கு வேறுவிதமான பகடியை தந்திருக்கிறது. உதாரணம், "கப்டன்" சிறுகதை. 

இவர்கள் இருவருக்கும் இருக்கும் ஒற்றுமை இருவருமே ஈழத்தமிழ்ர்கள். ஆனால், 19ம் நூற்றாண்டில் பிரிட்டிஸ் அரசாங்கத்தினரால் தேயிலை தோட்டங்களில் வேலை பார்ப்பதற்க்காக  இந்தியாவில் இருந்து அழைத்து செல்லப்பட்டு, 1948ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கள அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தால், ஒரே இரவில் நாடற்றவர்களாக மாற்றப்பட்ட மலையக தமிழர்களிடம் இருந்து அவர்கள் வாழ்வை எழுத்தில் வடிக்க கூடிய சொல்லிகொள்ளும்படியான எழத்தாளர்கள்  தோன்றவில்லை என்றே நினைத்திருந்தேன். இந்த பின்புலத்தில்தான், இந்த வருட விஷ்ணுபுரம் விருது, தெளிவத்தை ஜோசப் என்ற மலையக தமிழருக்கு வழங்கபடுவதை குழுமம் மூலம் அறிந்து, அவரது குடை நிழல் நாவலை வாசித்தேன். எந்த அரசியல் பின்புலமும இல்லாத ஒரு சாதாரணன், தமிழனாக பிறந்த ஒரே காரணத்தால் சிங்கள் பெரும்பான்மை அரசின் கொடுமைகளுக்கு ஆளாக்கபடுவதை இந்த நாவல் விவரிக்கிறது. எளிய நடையில் ஒரு டைரிகுறிப்பு போல் நேர்கோட்டில் பயணித்து, நமக்கு பயங்கரத்தின் முகத்தை அடையாளம் காட்டுகிறது. பணத்தை ஒரு சிங்கள வீட்டு உரிமையாளனிடம் பறி கொடுத்த காரணத்தால் போலிஸில் புகார் கொடுக்க, அதுவே விணையாக, பயங்கரவாதி என பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு, கொழும்பில் சித்ரவதைகளுக்கு பிரச்சித்தி பெற்ற நாலாம் மாடிக்கு இழுத்து செல்லபடும் நாயகன், கைது செய்யபடுவதில் இருந்து ஆரம்பிக்கிறது நாவல்.

நாம் முன்பு பார்த்தது போல், இந்த நாவலில் எந்த அங்கதத்திற்க்கும் வேலையில்லை. ஒரு பயங்கரத்தை அதன் போக்கில் விவரித்து போவதிலேயே வாசகனுக்கு உணர்த்த வேண்டியதை, செவ்வன செய்து விடுகிறது இந்த நாவல். எந்த முறைமையும் இன்றி யார் வேண்டுமானாலும் பயங்கரவாதி என்று குற்றம் சாட்டப்பட்டு, அமைதியான குடும்ப வாழ்விலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு காணாமல் போகடிக்கபடலாம் என்கிற நடைமுறை யதார்த்தம் நாவலில் விவரிக்கபடும்போதுதான் அதன், தீவிரம் உறைக்கிறது.

இந்த நாயகனுக்கு, கொரில்லா, ம் போன்ற நாவல்களில் வரும் நாயகனை போன்று, வாழ்க்கையில் மிக பெரிய கொள்கைகளோ, உரிமை போராட்டங்களோ இல்லை. எந்த அரசியலும் இல்லை. சாதாரண குடும்பஸ்தனாக தனது மகனை ஒரு நல்ல பள்ளி கூடத்தில் படிக்க வைப்பதற்க்காக, ஒரு நல்ல வாடகை வீட்டில் வசிப்பதற்க்காக ஆசைபடுகிறான். பிறந்து வளர்ந்து, முப்பது வருடங்கள் உழைத்த ஒரு பூமியில் இந்த சாதாரண ஆசை கூட அவனுக்கு அவனது இனத்தின் காரணமாக மறுக்கபடுகிறது. 


சரி, நடைமுறை யதார்த்தத்தை சரியாக ஆவணபடுத்துவதில் வெற்றியடையகிறது இந்த நாவல். இது இலக்கியமாக ஆவது எதனால்? நாயகனின் தாய் வாழ்ந்த வாழ்வை விவரிப்பதிலும், அதன் நுண்ணிய சித்தரிப்புகளிலுமே இது இலக்கியமாக மிளிர்கிறது.இரண்டாயிரம் ஏக்கர் தோட்டத்திற்க்கு கங்காணியாக, பணத்தில் புரளும் நாயகனின் தந்தை, வெளவால், காளான் கறியுடன், கள்ளு குடிப்பதில் தொடங்கி, கோட்டு போட்டு கொண்டு சம்பள நாளில் பவனி வருவதை சித்தரிப்பது, கிருஷ்ணா கள்ளுக்கு பாளை கட்டுவது  என நுண்ணிய விவரிப்புகள்.  பாவற்காய் கசப்பில் வளர்ந்த புழு போன்ற உவமைகள், வீட்டு உரிமையாளரின் பேரம் என ஒரு சுவையான கதை சொல்லியாக ஜோசப் மிகவும் கவர்கிறார்.


கள்ளின் போதையில், சுருட்டு பற்ற வைக்க காகிதமில்லாது, சம்பள பணத்தின் நோட்டுகளை ஒவ்வொன்றாக உருவி தீயில் காண்பித்து ,பற்ற வைத்துகொள்கிறார். அதிகாரத்தின் ருசியில், குடை நிழலின் மமதையில், அளவுக்கு மீறி ஆடும் நாயகனின் தந்தை, ஒரு நாள் குடிபோதையில் மனைவியை, வேலைக்காரன் கிருஷ்ணாவுடன் இணைத்து பேசுகிறார். வாழ்க்கை முழுவதும் அடிகளையும் உதைகளையும் எந்த முணுமுணுப்புமின்றி தாங்கி வந்த தாய், பொங்கி எழுகிறாள். இருவருக்குமான உறவு முடிந்ததன் அடையாளமாக, இருவரும் இணைந்து இன்புற்றிருந்த கட்டிலை எரிக்கிறாள். பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.அதிகாரத்தின் நுனியில் ஆடிய, தந்தை வாழ்வில் இறுதியில் அழிந்து இல்லாமலாகிறார். 


பெரும்பான்மை பலத்தில், அதிகார வெறியில், எளியோரை வதைக்கும் இனவெறி அரசியலால், எந்த தவறும் செய்யாத நாயகன், நாலாவது மாடியில் தனது விடிவை எதிர் நோக்கி காத்திருப்பதுடன், நாவல் முடிகிறது. அதிகாரத்தினால் ஆடிய தனது தந்தையின் வாழ்க்கையை, குடைநிழல் தந்த மமதையை, இங்கு அரசின் பயங்கரவாதத்துடன் தொடர்பு படுத்துவதில் நாவல் வெற்றி பெற்றுவிடுகிறது.தெளிவத்தை ஜோசப்பின் மற்ற எழுத்துக்களை படிக்க ஆர்வமாகயிருக்கிறேன்.

No comments:

Post a Comment

Write your valuable comments here friends..