Monday, December 1, 2014

காவியத்தலைவன் - தமிழ்சினிமா தொடாத தளம்

தவம் போன்ற இடைவிடாத பயிற்சியையும், கடுமையான கட்டுப்பாட்டையும் கொண்டு நடிப்புக்கலையின் உச்சத்தை அடைய துடிக்கும் கோமதிநாயகம் பிள்ளையை, தனது கற்பனையை மட்டுமே கொண்டு, கலையை கைவசப்படுத்தி, கடந்து செல்கிறான் காளியப்பா பாகவதர். தான், உயிருக்குயிராய் நினைக்கும் குருவும், காளியின் கற்பனையாலும், ஆர்பாட்டமில்லாத இயல்பான நடிப்பாலும் தூண்டபடுகிறார்.. அவனையே ராஜபார்ட் வேஷத்திற்க்கு பரிந்துரைக்கிறார்.


தான் செய்த வேள்வி போன்ற பயிற்சிக்கும், கடைபிடித்த ஒழுக்கத்திற்க்கும் என்ன அர்த்தம்? ஒழுக்கமற்றவனின் கலை, எப்படி தனது கலையை விட மேலானதாகும்? என்ற கேள்விகளால் நொந்து போகிறான் கோமதி நாயகம் பிள்ளை.. காளியப்பா பாகவதரை, தனது வாழ்வின் வெற்றி மூலம் வென்றுவிட துடிக்கும் போராட்டமே காவியத்தலைவன்.




1930களின் தமிழகநாடகமேடை வரலாற்றைக் கொண்டு ஒரு திரைக்கதையை எழுதி, அதை சினிமாவாக எடுக்க முயன்ற துணிச்சலுக்கு வாழ்த்துக்கள். வறுமையான வாழ்க்கை சூழலால் தள்ளப்பட்டு ஐந்து வயதிலேயே நாடக உலகிற்க்குள் தள்ளப்பட்டு, கந்தர்வகுரலோன் என்று செல்லுமிடங்களிலெல்லாம் வெற்றிக்கொடிநாட்டி தனது 28வது வயதிலேயே மறைந்த எஸ்.ஜி.கிட்டப்பாவின் வாழ்க்கை, ஒரு சினிமாவுக்குண்டான உணர்ச்சிகரங்களால் நிரம்பியது.



எஸ்.ஜி.கிட்டப்பாவின் வாழ்க்கைக்கு சற்றும் குறைவில்லாத மகத்தான ஆளுமை கே.பி.சுந்தராம்பாள். சிறுமியாக புகைவண்டிகளில் பாடி பிச்சையெடுத்துக் கொண்டிருந்த கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாளை, ஒரு மேதை கண்டெடுத்து, நாடக உலகில் அறிமுகப்படுத்துகிறார். தனது இனிமையான குரலாலும், உணர்ச்சிகரமான நடிப்பாலும் நாடக உலகின் முடிசூடா ராணியாக வலம் வருகிறார், கே.பி.எஸ். இலங்கையில் தங்கி நாடகங்கள் நடத்திக் கொண்டிருக்கும் சுந்தராம்பாளுக்கு இணையாக நடிக்க நாடக நடிகர்கள் தயங்குகிறார்கள்.. எஸ்.ஜி.கிட்டப்பாவை ஒப்பந்தம் செய்து இலங்கைக்கு அனுப்புகிறார்கள்.. அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டாம், அவர், உன்னை நாடக மேடையிலேயே, தனது நடிப்பால் சாய்த்துவிடுவார் என்று இருவரையும் தனித்தனியாக எச்சரிக்கிறார்கள் நலம்விரும்பிகள். சவாலை ஏற்று இருவரும் இணைந்து ஒருவரை ஒருவர் வெல்ல முயலுகிறார்கள்..கலையின் வடிவமாக ஒருவரை ஒருவர் கண்டுக் கொள்கிறார்கள்.. மனமொத்து திருமணம் செய்துக் கொள்கிறார்கள்..பிறகு, வாழ்க்கையின் சவால்களை வெல்லமுடியாமல், கசப்புணர்வு கொள்கிறார்கள்.. மதுவில் விழும் கந்தர்வகுரலோன், பல இழப்புகளுக்கு பிறகு தனது 28 வது வயதிலேயே இறக்கிறார்.தனது 25வது வயதில் வெள்ளையுடை அணிந்து, இனி யாருடனும் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று சபதமெடுத்து அதன்படி தனது வாழ்க்கை முழுவதும் தனியராகவே இருந்து மறைகிறார் சுந்தராம்பாள்.




காவியத்தலைவனில் காளிக்கும், வடிவாம்பாளுக்குமான வாழ்க்கை ஒரு சிறுபகுதிதான்..காளியை வென்றுவிட துடிக்கும் கோமதிநாயகத்தின் மனப்போராட்டமே, கதையை நிகழ்த்திச் செல்கிறது. ப்ருதிவிராஜ், சித்தார்த் இருவருக்குமே, தாங்களும் திரையுலகில் இருந்தோம் என்ற தடத்தை விட்டுச் செல்வதற்க்கான வாய்ப்பு இது.

துரோணரின் மதிப்பை பெற்று, அர்ஜுனனை வென்று தான் முதல்மாணவனாக வேண்டும் என்ற அஸ்வத்தாமனின் துடிப்பை, பொறாமையை, ஆற்றாமையை அழகாக பிரதிபலிக்கிறார் ப்ருதிவிராஜ்.

தான் நினைத்தது போலவே வெற்றிப் பெற்று, பல நாடுகளுக்கும் சென்று புகழ்பெற்று, தான் வெற்றிப் பெற்றுவிட்டோம் என்று பெருமிதம் மிளிர திரும்பும் கோமதிநாயகம், தமிழகத்துக்கு வந்தவுடன் விசாரிப்பது காளியப்ப பாகவதரை பற்றி. வாழ்க்கை முழுவதும் கோமதிநாயகத்தை, தூங்கவிடாமல் துரத்தியடிப்பது, காளியின் கலைமீதுள்ள பயம் தான். கோமதியால், காளியின் கலையை இறுதிவரை புரிந்துக் கொள்ளமுடியவில்லை.. குருவிடம் கேட்கும் போது, "எல்லாத்தையும் விளக்க முடியாது, சிலதை உணரனும்" என்று சொல்லிச்செல்கிறார்.. ஆனால் தன்னுடைய கலையை விட காளியின் கலை ஏதோ ஒரு தளத்தில் மேன்மையானது என்ற அச்ச உணர்வே கோமதியை, 
உடல்நலன் குன்றி படுக்கையில் கிடக்கும்போதும், காளிக்கு ராஜபார்ட் கொடுக்கவிடாமல், தானே நடிக்கும்படி செய்கிறது. ஆனால், எல்லாவற்றையும் இழந்து, குடியில் அழிந்துக் கொண்டிருக்கும் நிலையிலும், கர்ண மோட்சத்தில் அர்ஜுனனாக ஒரே ஒரு காட்சியில் தோன்றும் காளி, தனது உன்னதமான நடிப்பால் மக்களை வெல்கிறான்... மீண்டும் புகழ்பெறுகிறான்.


பழிசுமத்தப்பட்டு, குருவின் சாபத்துக்கு ஆளாகி துடிப்பது, குருவின் குற்றத்தால், காதலியை இழந்த சுயஇரக்கத்தில், குருவுக்கே சாபம் கொடுப்பது என தமிழ் சினிமா தொடாத தளங்களில் கதை பயணிக்கிறது. 1930களின் சூழ்நிலையை காட்சிபடுத்துவதில் பெருமளவு வெற்றிப்பெற்றிருக்கிறார் வசந்தபாலன். ஐந்து வருடங்கள் கழித்து, குடியில் தள்ளாடியபடி எதிர்பாராமல், காளி கோமதிநாயகத்தை சந்திக்கும் காட்சி படத்தின் உச்சங்களில் ஒன்று.. ராஜமார்த்தாண்டன், தனது குரு பேராசிரியர் ஜேசுதாசனை சந்திக்கும் அறம் சிறுகதையை நினைவுபடுத்துகிறது இந்த காட்சி..

உலகமே கொண்டாடினாலும், காளியின் மதிப்பை பெற போராடுகிறாள் வடிவு..காளியின் கலையின் மீதான தன்னுடை பித்தை எதன் பொருட்டும் இழக்காமல், காளிக்காக வீட்டை விட்டு வெளியேறுகிறாள். வெளியேறும்போது "ஜமினுக்கு மகளை அனுப்பும் அம்மா எனக்கும் தேவையில்லை" என்ற ஒரு வரி வசனத்தில், அன்றைய சூழல் விளக்கப்பட்டு விடுகிறது.. 

காளியைக் கொல்லுமளவுக்கு கோமதியை தூண்டுவது எது? குருவின் அன்பு, வடிவாம்பாளின் காதல், மக்களின் பாசம் என எல்லாவற்றையும் காளியிடம் இழக்கும் கோமதிநாயகத்தின் மீது பரிதாப உணர்ச்சியை ஏற்படுத்துவதில் படம் வெற்றிப்பெற்றுவிடுகிறது. இந்த இழப்புகள் அனைத்தையும் விட, நாடக காண்ட்ராக்டரிடம் தான் இழந்த நகைகளை காளி மீட்டு வந்து தன்னிடமே கொடுத்ததைதான் தன்னால் மன்னிக்கவே முடியவில்லை என்கிறான் கோமதி.. பகைமையின் உச்சக்கட்ட கொடூரத்தை, மனதின் விசித்திரத்தை, வசனத்தின் வழியாக வரைந்துவிடுகிறார் ஜெயமோகன்.


வாழ்க்கையின் எல்லாபடிகளிலும் தொடர்ந்து காளியால் தோற்கடிக்கப்படும் கோமதிநாயகம் பிள்ளை, காளியை கொன்றுவிடுவது மூலம், அவனை வென்றுவிடலாம் என்று, துணிகிறான். ஆனால்,  காளி, தனக்கு கோமதியால் இழைக்கப்பட்ட அநீதிகளை அறிந்தே இருப்பதாக சொல்கிறான். இதை வெளிப்படுத்தும் தருணத்தில், கோமதிநாயகம் இழியுணர்ச்சியால் மேலும் பலபடிகள் பின்னோக்கி தள்ளபடுகிறான். என்னை கொல்வதன்மூலம் உங்களுக்கு அமைதி கிடைக்கும் என்றால், நான் சாகத்தயார் என்று சொல்வதன் மூலம், காளி வெல்லவே முடியாத இடத்துக்கு உயர்கிறான். இனி அவனை கொல்வதன்மூலம் ஒருபோதும் தன்னால் வெல்ல முடியாது என்று புரிந்துக் கொள்ளும் கோமதி, கையில் துப்பாக்கியுடன் இருக்கும் இந்த சூழலில் அவனை கொல்லாமல் விடுவதன்மூலம் தன்னுடைய விடுதலையை அடைய நினைக்கிறான். அதற்கு வாய்ப்பளிக்காமல் காளி இறந்துபோகிறான். கோமதி, காளியின் மீது கொண்டிருந்த வெஞ்சினத்தை தெரிந்துவைத்திருந்த போதும், தொடர்ந்து காளி அவனை மன்னிப்பதன் மூலம், கோமதியை மீள முடியாத இழிவுணர்ச்சிக்குத் தள்ளுகிறான். காளிக்கு தன்னுடைய கலையின் மேன்மை புரிந்திருக்கிறது. சொல்லபோனால், பெருந்தன்மை மற்றும் மன்னிப்பு மூலம் காளியும் கோமதியை தண்டித்துக் கொண்டேதானே இருக்கிறான்.


படத்தின் குறைகள்? உண்டு. உண்மையில் சங்கரதாஸ் சுவாமிகளுக்கு நிகரான வேடம் கொண்ட நாசரின் பாத்திரம் மீது, சில காட்சிகள் மூலம், நமக்கு பெருமதிப்பும் வியப்பும் ஏற்படுத்தியிருக்க வேண்டும் இயக்குநர். அதுவே பிற்பாடு நிகழும் சீடர்க்குள்ளான போட்டிக்கு சரியான களமாக அமைந்திருக்கும்..  அதே போல், வடிவாம்பாள் பாத்திரத்தின் கனத்தை, கோமதி அவள் மீது கொண்டிருக்கும் பிரேமையை, பார்வையாளனுக்கு சரியாக கடத்தியிருக்கவேண்டும். இவையிரண்டும் நிகழ்ந்திருந்தால், கோமதியின் இழப்பை, ரசிகன் இன்னும் ஆழமாக புரிந்துக் கொண்டிருக்க கூடும்.

சுவாமிகள் மீது இயல்பாக ஏற்ப்ட்டிருக்க வேண்டிய வியப்பையும் மதிப்பையும், குறைப்பதில் ஆரம்பக்கட்ட காமெடிகாட்சிகளுக்கும் பங்குண்டு. இசை தனிஆல்பமாக சிறப்பானது. பின்ணனி இசையும் சரியாக பொருந்தியுள்ளது ஆனால், பாடல்கள் 1930களின் இசையை பிரதிபலிக்கவில்லை. பாகவதர் பாடல் போன்ற பாவத்துடன் கூடிய ஒருபாடல் இதை சரிக்கட்டியிருக்க கூடும்.




இது போன்ற குறைகள் இருந்த போதிலும், காவிய தலைவன் தொட்டிருக்கும் இடம் அலாதியானது..மரியாதைக்குரியது. நான் பார்த்த தோக்கியோ திரையரங்கில், பார்த்தவர்கள் அனைவரும் படம் முடிந்தவுடன் கைத்தட்டினார்கள். இதில் ஜப்பானியர்களும் அடங்கும். ஒரு நல்லபடத்தை பார்த்த திருப்தி அவர்களது முகத்தில் இருந்தது. 














Saturday, August 30, 2014

நான் எப்போ வருவேன்.. எப்படி வருவேன்..

தன்னுடைய புதுப்படம் தயாரிப்பு நிலையில் இருக்கும்போதெல்லாம், அரசியலுக்கு, வந்தாலும் வருவேன்..ஆனா அது ஆண்டவன் விருப்பம்.. என்றெல்லாம் கொளுத்தி போட்டு, ரசிகர்களின் டெம்போ குறையாமல் பார்த்துக் கொள்வது ரஜினியின் வழக்கம்தான். அவரை சற்றும் ஏமாற்றமடைய விடாமல் உடனே ஊடகங்கள், ரஜினி வருவாரா? 2016 எலக்‌ஷனுக்கு எண்டரி என்றெல்லாம் தலைப்பு கொடுத்து, விவாதங்களை துவக்கி வைக்கின்றன.

உண்மையில் இது போன்ற செய்திகளுக்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது? ரஜினிக்கு இருந்த அரசியல் வாய்ப்பு அடைப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது. 1996ல் இருந்த அரசியல் சூழல், இளைஞர்களின் அரசியல் அறிவு இவையெல்லாம் வேறு. இன்றைய சூழல் முற்றிலும் வேறு.

ரஜினியின் தீவிர ரசிகர்கள் எல்லாம், இனி ரஜினி அரசியலுக்கு வரபோவதில்லை என்று ஏமாற்றத்துடன் முடிவெடுத்து, வாழ்க்கையின் பல கட்டங்களைத் தாண்டி, இன்று குழந்தைகளை கல்லூரிக்கு அனுப்பி வைத்து விட்டு, நன்கு சரிந்த தொந்தியுடன் கிடைத்த வேலைகளில் தம்மை பொருத்திக் கொண்டு ஓய்ந்துவிட்டனர்..இனி ரஜினி அரசியலுக்கு வந்தாலும், இவர்களால் ஓடியாடி பிரச்சாரம் செய்யவோ, மாற்றுக் கட்சியினருடன் மல்லுக் கட்டவோ முடியாது என்பதுதான் நிதர்சனம்

சரி போகட்டும், அரசியலில்தான் அப்படி என்ன புரட்சி கருத்துக்களை இதுவரை அவர் கூறியுள்ளார்? மணிரத்னம் வீட்டில் பெட்ரோல்பாம் விழுந்த போது, நாட்டில் சட்டஒழுங்கு சரியில்லை என்றார். கோவையில் பாம் வெடித்தபோது, இதில் வெளிநாட்டு கை இருக்கிறது. அதைவிட உள்நாட்டு கை இருக்கிறது என்று சிகரெட் பிடித்தபடி, தெள்ளத்தெளிவான கருத்தை கூறினார்.

இலங்கை ராவணன் ஆண்ட தேசம்..அனுமார் அங்கு போய் வைத்த தீ இன்னமும் எரிந்துக் கொண்டிருக்கிறது. எனவே தான் அங்கு உள்நாட்டு போர் நடக்கிறது. அங்கு அமைதியான சூழல் ஏற்பட வாய்ப்பே இல்லை. என்று தனது தீர்க்கதரிசனத்தைக் காட்டினார்.

இவரை வைத்துக் கொண்டு ஏன் இப்படி பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்கள்?

Sunday, July 13, 2014

தமிழ்திரையுலகின் பொக்கிஷம்

அது 1992. நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்தேன். மன்னார்குடிக்கு வைரமுத்து வந்திருந்தார். தேசியமேல்நிலைபள்ளியின் சாரதி கலையரங்கத்தில் நிற்க கூட இடமில்லை. ரோட்டைத் தாண்டி, ஒத்தைத்தெரு பிள்ளையார்கோவிலின் மண்டபத்தின் மேல் எல்லாம் ஏறி நின்றது கூட்டம்.கம்பீரமான தமிழில் சொக்கி போய் நின்றது மக்கள் வெள்ளம்.

முகிலினங்கள் அலைகிறதே,முகவரிகள் தவறியதோ..
முகவரிகள் தவறியதால் அழுகிறதோ, அது மழையோ

போன்ற வைரவரிகள் என்னுள் ஏற்படுத்திய கிறக்கம் அந்த காலக்கட்டத்தில் சொல்லில் அடங்காதது. கூட்டம் முடிந்தவுடன், BSA SLR சைக்கிளில் துரத்திக் கொண்டே போய் டி.பியில் உள்ளே நுழைந்தேன். இரவு 11 மணிக்கு அங்கேயும் ஒரு பெருங்கூட்டம் நின்றது. எப்படியோ உள்ளே போய் ஆட்டோகிராப் வாங்கினேன். எனக்கு பாடல் எழுத வேண்டும் என்று ஆசையிருக்கிறது ஸார் என்றேன்.. சிரித்துக் கொண்டே பெயரை கேட்டார். பழைய தமிழிலக்கியங்கள் படிங்க. ஒரு பிடி கிடைக்கும் என்றார்.. ஒரு கவிஞர் போலவே மிடுக்குடன் வீட்டுக்கு திரும்பி கனவுகளுடன் உறங்கினேன்..





அன்று முதல், இன்று வரை எனக்கு அவர் ஆச்சரியங்களை கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறார். பிறகு சரியாக 10 வருடங்கள் கழித்து, 2002ல் தோக்கியோ வந்தார்.. ஆசைஆசையாய் பொங்கல் விழாவில் நெருங்கி போய் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தேன். கடைசியாய் சாகாவரம் பெற்ற, தமிழ் சினிமா ரசிகனின் நெஞ்சினில் ஏக்கமாய் உறைந்து விட்ட அந்த கேள்வியை கேட்டேன்.. நீங்க மறுபடியும் ராஜா சார் மியூசிக்லே பாட்டு எழுத வாய்ப்பே இல்லையா சார்? ஆழமான பார்வையுடன், இதழோரம் மெலிதாக சிரித்து, பார்க்கலாம் செந்தில் என்றார்..

தென்றல் தொட்டதும், மொட்டு வெடித்தால்,
கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா?

கொல்லை துளசி, எல்லை கடந்தால்,
வேதம் சொன்ன சட்டங்கள், விட்டுவிடுமா?

என்று இரண்டு வரிகளில், அந்த படத்தின் கதையை சொல்வதாகட்டும்..

தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீ தான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது

தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளமையிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இள மயிலே

என்று காதலின் தவிப்பை சொல்வதாகட்டும்,

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் வைரமுத்து…
அவரை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டது ஏ.ஆர் ரகுமான்.

முறைதவறிய ஒரு காதலை நியாயபடுத்த வேண்டும். அந்த காதலினால் அவமானத்துக்கு ஆளாகியிருக்கும் ஊர் பெரிய மனிதரின் சோகத்துக்கு ஆறுதல் கூற வேண்டும்..

களங்கம் வந்தாலென்ன பாரு.. அதுக்கும் நிலான்னுதான் பேரு..
அட மந்தையிலே நின்னாலும், நீ வீரபாண்டி தேரு..

தேர்திருவிழா நாளை தவிர மற்ற எல்லா நாளும் மந்தையில், காற்றிலும், வெயிலும் தனியாகதான் நிற்கிறது.. அதனாலென்ன.. அப்பவும் அது தேர் அல்லவா…

திரும்பவும் 25 ஆண்டுகள் கழித்து பிறன்மனையை காதலிக்கும் சிக்கலில் விழும் ஒருவனுக்கு ஆறுதல் கூறுகிறது வைரமுத்துவின் எழுதுகோல்..

அடி தேக்குமர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்..

அக்னி பழமென்று தெரிஞ்சிறுந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி..

விதி சொல்லி வழி போட்டான் மனுசுபுள்ளே
விதிவிலக்கில்லாத விதியும் இல்லை..

எவ்வளவு எளிதாக ஒரு அறமீறலை நியாயபடுத்தி விடுகிறார்..

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.. சந்தேகமே இல்லாது தமிழ் திரையுலகின் ஒப்பற்ற ஒரு பாடலாசிரியன் வைரமுத்துதான்.. வீம்புக்காகவும், வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்க்காகவும் ஒரு சிலர், வேறு சில பாடலாசிரியர்களின் பெயர்களை சொல்வதுண்டு.. அது ஒரு மகத்தான கலைஞனுக்கு செய்யும் அநீதி..

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Tuesday, July 1, 2014

டாஸ்மாக் ஆபாசங்கள்

உலகிலேயே அசுத்தமான இடம், தமிழ்நாட்டின் டாஸ்மாக் பார் தான். குடிக்க வருபவர்களை, சாக்கடை பன்றிகள் போல் நினைத்தே, அப்படி பராமரிக்கபடுகிறது. குடிமகன்கள்,உள்ளே நுழைந்தவுடனேயே, துப்ப தொடங்கிவிடுகிறார்கள்.. காலுக்கு கிழேயே துப்பிக் கொண்டு, கவலையே படாமல் குடிக்கிறார்கள். அடுத்து வரும் நபர் அந்த எச்சிலின் மேலேயே, மேலும் துப்புகிறார்.. பீர், விஸ்கி என எல்லா பிராண்டுகளும் எப்போதும் பத்து ரூபாய் அதிகம் வைத்தே விற்கபடுகிறது. இந்த பணம் உள்ளூர் அளும்கட்சி நபர்களுக்கு போவதாக சொல்கிறார்கள்.. சைட் டிஸ் என்ற பெயரில், நாறிபோன, பொதுவாக வீட்டில் சமைக்காத, குடல், ஈரல் போன்ற அயிட்டங்களை, அழுகிய தக்காளி விட்டு வதக்கி, அழுக்கு பிசுப்பு ஏறி கிடக்கும் பிளாஸ்டிக் தட்டுகளில் கொண்டு வந்து வைக்கிறார்கள்..சராசரியாக ஒரு மணி நேரத்திற்க்கு ஒருவர் வாந்தி எடுக்கிறார். விளக்குமாறு கொண்டு, நான்கு முறை தேய்த்து விட்டு, மீண்டும் சேர் போடபடுகிறது. குடிப்பது குறித்து கேவலமான குற்ற உணர்வை இந்த பார்கள் தான் ஏற்படுத்துகின்றன. போதையுடன், கொலைசெய்தது போன்ற குற்ற உணர்ச்சியுடன் வீட்டுக்கு திரும்பும், நபர் மனைவி, பிள்ளைகளை அடித்து நொறுக்கி அமைதியடைகிறார்.. குடியை ஒழிக்க வேண்டும் என்பது ஒருபுறம் இருக்க, இப்படி குடிப்பவர்களை கேவலப்படுத்தி, அவர்களை மீளமுடியாத சாக்கடையில் தள்ளி, அவர்களது பையிலிருந்தே பிக்பாக்கெட் அடித்த பணத்தை கொண்டு, இலவசங்கள் தரப்படுகிறது..

Thursday, February 13, 2014

இனிக்கும் வாழ்விலே.. என் சொந்தம் நீ..!


பாலு மகேந்திரா என்ற கலைஞனை நான் கண்டுக்கொண்ட படம் வண்ண வண்ண பூக்கள் திரைப்படம் தான். அப்போது நான் ப்ளஸ் ஒன் படித்துக் கொண்டிருந்தேன். அந்த படம் உருவாக்கிய மனஎழுச்சி இப்போதும் நினைவில் இருக்கிறது. இரண்டே வாரம் விஜயா தியேட்டரில் ஓடிய அந்த படத்தை நான் ஆறு தடவைகளுக்கு மேல் பார்த்திருந்தேன். ஒரு காட்சியில், பாலுவின் கேமரா, பறவை கூட்டத்தை விடாமல் துரத்தும். ஒவ்வொரு  தடவையும் அந்த காட்சியில், திரையரங்கமே கரவொலியால் அதிர்ந்தது. இயற்க்கையை ரசித்த வண்ணம் BSLR சைக்கிளில் இளநெஞ்சை வா..வா என்று பாடியபடி செல்லும் பிரசாந்த் எனக்குள் பல கனவுகளை எழுப்பியிருந்தார். யேசுதாஸின் குரலில் ராஜாவின் இசையில் பாலுவின் ஒளிப்பதிவில் அந்த பாடல் என்னை போல் பலருக்கும்  கனவுகளை தந்திருந்தது என்பதை பின்னாளில் உணர்ந்தேன். 



அந்த திரையரங்கு இப்போது இல்லை.  என் நினைவு சரியாக இருக்குமானால் 92ம் வருடம் தான் அது மூடப்பட்டது. சொத்து பிரச்சினையில் மூடப்பட்டு இப்போதும் கூரை இழந்து வெறும் சுவர்களோடு தனது வசந்த காலத்தை நினைவு கூர்ந்தபடி மெளனசாட்சியாய் நிற்கிறது. அந்த திரையரங்கை கடக்கும் தோறும் எனது பால்ய கால நினைவுகளை மீட்டி செல்கிறேன். 

வாழ்க்கையை ரசிக்கும் ஒரு இளைஞன், காட்டுக்குள் ஒரு அழகியை சந்திக்கிறான். அவர்கள் இருவர்க்குள் காதல் மலர்கிறது. இருவருக்கும் மட்டுமே ஆன ஒரு உலகில் வாழ தொடங்குகிறார்கள். தினமும் காட்டுக்கு வந்து அந்த அழகியுடன் வாழ்ந்து போகிறான் அவன். எவ்வளவு அழகிய கனவு ?பாலுவின் படைப்புலகம் இப்படிதான் கனவுகளை தொடர்ந்து உருவாக்கி அளித்தது. பாலு வாழவிரும்பிய வாழ்க்கையை அவர் தனது நாயகர்களுக்கு அளித்தார். இந்த பிரபஞ்சத்தின் மகத்தான படைப்பான, தேவதைகளை அவர் நிஜத்திலும் நிழலிலும் திகட்ட திகட்ட நேசித்தார். 

மனநிலை தவறிய ஒரு அழகி, யாருமற்ற ஒரு இளைஞனுடன் கழிக்கும் பொழுதுகள்தான் மூன்றாம்பிறை. ஏற்கனவே திருமணமான ஒரு இயக்குநருக்கு அழகான நடிகையுடன் ஏற்படும் பந்தம் தான் மறுபடியும். வீட்டு வேலை செய்ய வரும் ஒரு பெண்ணுடன் இளைஞனுக்கு ஏற்படும் உறவுதான் அது ஒரு கனா காலம். இப்படி ஆண் பெண் உறவுகளை மையமாக்கித்தான் அவரது படங்கள் சுழன்றது. 

வீடு, சந்தியாராகம் போன்றவை, அடுத்த தளத்துக்கு செல்ல, பாலு செய்த முயற்சிகள் மட்டுமே. அவரது வெற்றி இடைநிலை படங்களில் மட்டுமே சாத்தியமானது. அடிப்படையில் பாலு அழகை நேசிக்கும், எதையும் காட்சிபூர்வமாக அணுகும்  ஒரு ஒளிப்பதிவாளர். எந்த காட்சியிலும், அவரது உள்ளுணர்வு, அழகியலை மையமாக்கியே சிந்தித்தது. மற்ற எந்த அம்சத்தையும் விட அழகியலையே அவர் முன் வைத்தார். அவர் அளவுக்கு கமலை அழகாக யாரும் காட்டவில்லை. ஊட்டி அவருக்கு மட்டும் தனது பொக்கிஷங்களை திறந்து வைத்தது. ராஜாவின் பாடல்களுக்கு பாலு மட்டுமே தகுந்த நியாயம் செய்தார். 

மாவு பொம்மை போன்ற பெண்களை, கதிரவனின் ஒளிப்பட்டாலே சிவந்துவிடும் பால்மேனி பதுமைகளை நடிகைகள் ஆக்கி, தமிழர்களுடைய வாழ்வோடு விளையாடிய இயக்குநர்கள் மத்தியில் பாலு மட்டும்தான் திராவிடத்தின் வண்ணத்தை கொண்ட, யதார்த்த தமிழர் வாழ்வோடு பொருந்துகிற மாநிற பெண்களான மாதவி, அர்ச்சனா, ப்ரியாமணி போன்றோரை தனது கதையின் நாயகிகள் ஆக்கினார். ஏறக்குறைய அவரது ஒவ்வொரு கதாநாயகியையும் நானும் காதலித்தேன்.  



விஷ்ணுபுரம் கூட்டத்திற்க்காக கோவை சென்றிருந்தபோது, நடு இரவில் பாலுவுடன் வேலைபார்த்த கவிஞர் சாம்ராஜ் உடன் பாலுவை பற்றி பேசிக்கொண்டிருந்தது ஞாபகத்துக்கு வருகிறது. பாலுவை இவ்வளவு நேசித்த நான், யோசித்துப் பார்த்தால், எப்போதும் எங்கேயும் அவரை விதந்தோதியதில்லை. மாறாக விமர்சித்தே வந்திருக்கிறேன். இப்படி திரைப்படைத்தையும், இலக்கியத்தையும் உயிர் என நேசிக்கின்ற ஒரு மகா கலைஞன், தீவிரமான தளங்களை, கதைகளை கையிலேடுத்து, அடுத்த கட்டத்துக்கு நகராமல் இருக்கிறானே என்ற ஆதங்கமே, அதற்க்கு காரணம். இப்போது யோசித்தால் பாலு மகேந்திரா என்ற ரசிகன் இப்படித்தான் இருந்திருக்க முடியும் என்று தோன்றுகிறது.

நான் நேரில் சந்திக்கவேண்டும் என்று விரும்பிய, ஆனால் சந்திக்கவே முடியாமல் போன ஒரு கலைஞனும் பாலுமகேந்திராதான். சென்ற முறை ஊருக்கு வந்திருந்தபோது, தலைமுறைகள் படம் பார்க்க விரும்பி திருச்சி காவேரி திரையரங்கிற்க்கு சென்றால், முதல் நாள்தான் அந்த படத்தை எடுத்திருந்தார்கள். 

அவனது நினைவுகளை அவனது படைப்புகள் கொண்டு அல்லாமல்  வேறு எப்படி கடக்க?

இதோ தனிமையில், கண்ணம்மா காதல் எனும் கவிதை சொல்லடி என்ற பாடலை கேட்டபடி, கண்ணீர் துளிகளை உதிர்த்தபடி, அவனை மெளனமாக, ரகசியமாக பெரும் காதலுடன் பின் தொடர்ந்த ஒரு ரசிகன்.