Monday, September 22, 2014

போரும் அமைதியும் - மானுடத்தின் மீதான பெருங்காதல் - 3

இளம்வயதிலேயே தாய்தந்தை இறந்துவிட, வயதான பாட்டியுடன் வளர்ந்தார்கள், செண்பகமும், அவளது தம்பி சீனிவாசன். செண்பகம் மிக எளிமையாக உடை உடுத்துவாள். ஆனால் அந்த எளிமையிலும் ஒரு அழகு மிளிரும்.  சீனிவாசன் இளவயதிலேயே தனது குடும்ப நிலையை கருத்தில் கொண்டு, படிப்பில் கருத்தாக இருந்தான். பி.காம் முடித்த பிறகு, தொடர்ந்து பல அரசாங்க வேலைகளுக்கு, மனு போட்டு,தகுதி தேர்வுகள் எழுதிக் கொண்டு காத்திருந்தான். ஒவ்வொரு முறையும் சீனிவாசன் தேர்வு எழுத செல்லும்போது, செண்பகம் வீட்டுக்கு வருவார். அம்மாவிடம் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, கைமாத்தாக பணம் கேட்பார். பிறகு சீனிவாசனுக்கு வங்கி வேலை கிடைத்தது. வேலை கிடைத்த சில ஆண்டுகளில், தான் கூட வேலைப் பார்த்த பெண்ணை காதல் திருமணம் செய்தான். குழந்தைகளை கான்வெண்டில் படிக்கவைத்தான் ஹிரோ ஹோண்டா பைக் வாங்கினான்.  செண்பகம் மட்டும் அதே சாயம் போன தாவணியுடன், இட்லிக்கு மாவு அரைத்து, குழந்தைகளை ஸ்கூலுக்கு கிளப்பி, தம்பி மனைவிக்கு புடவை தேய்த்துக் கொடுத்து, இருவரையும் வேலைக்கு அனுப்பி வைத்துவிட்டு, கிணற்றடியில், உட்கார்ந்து தம்பி வாங்கி கொடுத்த கையடக்க டிரான்சிஸ்டரில், “என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்” பாட்டு கேட்டாள். நாற்பதை கடந்தபின்னரும், செண்பகம் தாவணிதான் கட்டுகிறாள். இப்போதெல்லாம், தனியாக உட்கார்ந்து பேசிக் கொள்ள வேறு, கற்றுக் கொண்டுவிட்டாள்.

போரும் வாழ்வும் சோனியாவின் பாத்திரத்துக்கும், செண்பகத்துக்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. சுயநலமில்லாத உழைப்பை, எந்த குற்ற உணர்ச்சியும் ஏற்படுத்தாத வண்ணம் மற்றவர்களுக்கு வழங்க, ஒரு சிலரால் மட்டுமே முடிகிறது.நடாஷாவின் சகோதரன் நிக்கோலஸ் ரோஸ்டோவுக்கும் சோனியாவுக்கும் இடையிலான உறவு விசித்திரமானது. ஆதரவற்ற குழந்தையாக நிக்கோலஸ் குடும்பத்தினரிடம் வந்து சேர்ந்தவள் சோனியா. பள்ளி பருவத்தில் நிக்கோலஸுக்கும் சோனியாவுக்குமிடையே காதல் மலருகிறது. முதலில், தனது அன்பை நிக்கோலஸ் பிரதிபலிக்கிறானா என்று சந்தேகபடுகிறாள். இருப்பினும் தனது அன்பை பிரதிபலன் பாராது நடாஷாவின் குடும்பத்தின் மீது பொழிகிறாள். விடுமுறைக்கு வீட்டுக்கு வரும் நிக்கோலஸின் நண்பன் டோல்கோவுக்கு சோனியாவின் மீது காதல் மலருகிறது. மிகுந்த பொருளாதார சிக்கலில் இருக்கும் நடாஷாவின் குடும்பத்திற்க்கு இந்த காதல் பொருத்தமானதாக தோன்றுகிறது. ஆனால், சோனியா அந்த காதலை நிராகரிக்கிறாள். இந்த பரிசுத்தமான அன்பை கண்டு நெகிழ்கிறான் நிக்கோலஸ் நிக்கோலஸுக்கு வசதியான பிரபுகுடும்ப பெண்ணை திருமணம் செய்வதன் மூலம், பொருளாதார சிக்கலில் இருந்து மீள நினைக்கும் அவனது தாய், சோனியாவின் காதலை விட்டுதரும்படி கோருகிறாள். அதை ஏற்று சோனியா, ராணுவத்தில் இருக்கும் நிக்கோலஸுக்கு கடிதம் எழுதுகிறாள் சோனியா.முதலில் அதை மறுக்கும் நிக்கோலஸ், காலஓட்டத்தில் மிகவும் வசதியான ஆண்ட்ருவின் தங்கை மேரியை, காதலித்து மணம் முடிக்கிறான். அவர்களுடனே தங்கி, அந்த குடும்பத்திற்க்கு பணிபுரிய தொடங்குகிறாள் சோனியா.

குற்ற உணர்ச்சியில் தவிக்கும் மேரி, நடாஷாவிடம் சோனியா பற்றி கேட்கும் போது, நடாஷா மிக எளிதாக சொல்கிறாள். சோனியா ஒரு அழகான மலட்டு மலர். மற்றவர்களுக்கு உதவியாக இருப்பதிலேயே, சோனியா தனக்கான வாழ்க்கையை வாழ்ந்துமுடிக்கின்றவள். ஒருபோதும் தனக்கு என்று அவள் வாழபோவதில்லை என.

நடாஷாவின் உயிர்தோழி சோனியா. ஆனால் நடாஷா, அனடோலுடன் ஓடிபோக எத்தனிக்கையில், இரவு முழுவதும் விழித்திருந்து அதை தடுக்கிறாள். அவ்வாறு செய்வதன்மூலம் அந்த குடும்பத்திற்க்கும், தனது காதலானான நிக்கோலஸுக்கும் தனது கடமையை செய்வதாக நினைக்கிறாள். எந்த நேரமும், அந்த குடும்பத்திற்க்கு உதவுவதிலேயே, தனது காலத்தை கழிக்கிறாள். ஆனால் அவள் மீது ஒருவருக்கும் உண்மையான அன்பும் கரிசனமும் தோன்றவில்லை. இதை அழகாக இருவரிகளில் சொல்லி செல்கிறார் தல்ஸ்தோய். நமக்கு உதவி செய்பவர்களை, நாம் காதலிப்பதில்லை. நாம் உதவி செய்பவர்களையே, காதலிக்க தொடங்குகிறோம். எவ்வளவு சரியான தரிசனம்?காலம் முழுவதும் உதவிசெய்யும் சோனியா மறுதலிக்கபடுகிறாள். ஆனால் விவசாயிகளின் கலகத்தில் மாட்டிக் கொள்ளும் மேரியை, சரியான நேரத்தில் காக்கிறான் நிக்கோலஸ். மேரி மீது நிக்கோலஸுக்கு காதல் மலருகிறது. உதவியை ஏற்கும் போது நமது தன்னகங்காரம் காயப்படுகிறது. உதவி செய்யும் தன்னகங்காரம் திருப்தியடைகிறது. அது காதலாக கனிவு காட்டுகிறது. உண்மையில் தல்ஸ்தோய், காதல் தோல்வியால், திருமணம் செய்துக் கொள்ளாமல் வாழ்ந்த தனது அத்தை ஒருவரை வைத்தே சோனியா பாத்திரத்தை உருவாக்கியுள்ளார்.
டோல்கோவின் காதலை, நிக்கோலஸ் மீது கொண்ட பேரன்பினால் மறுக்கிறாள் சோனியா. உடனே டோல்கோவ், நிக்கோலஸை சீட்டாட்டத்திற்க்கு அழைக்கிறான். நட்பின் அடிப்படையில் என்று நினைத்து அந்த சூதாட்டவிடுதிக்கு செல்லும் நிக்கோலஸை, கொஞ்சம் கொஞ்சமாக மீள முடியாத கடனில் சிக்க வைக்கிறான், டோல்கோவ். கண்ணெதிரே சிறிதுசிறிதாக தனது பணத்தை இழக்கும் நிக்கோலஸின் மனநிலையை ஒரு சிறந்த சூதாடியினால்தான் காட்சிபடுத்தமுடியும். தல்ஸ்தோய் ஆட்டத்தின் ஒவ்வொரு நிலையிலும், நிக்கோலஸ் எவ்வாறு தன்னை இழக்கிறான் என்று விவரிக்கிறார். நாற்பத்தி மூன்றாயிரம் ரூபல்களை, டோல்கோவிடம் இழக்கிறான் நிக்கோலஸ். நாற்பத்திமூன்றாயிரம் என்பதை ஆட்டம் தொடங்கும்போதே மனதில் வைத்துக் கொள்கிறான் டோல்கோவ். ஏன் என்றால், 43 என்பது அவனது வயதையும், சோனியாவின் வயதையும் கூட்டி வரும் எண்.

ஏற்கனவே தனது ஆடம்பரத்தால், பொருளாதார சிக்கலில் விழ்ந்திருக்கும் நிக்கோலஸின் தந்தை, சூதாட்டத்தினால் ஏற்படும் கடனையும் ஏற்கிறார். நிக்கோலஸ் மனம் ஒடிந்து ராணுவத்திற்க்கே திரும்புகிறான். பிறகு காலஓட்டத்தில் வசதியான மேரியை திருமணம் செய்துக் கொள்கிறான். வைத்திருக்கும் சொத்துக்களை விட இருமடங்கு கூடுதலான கடனுடன் செத்துபோகிறார் நிக்கோலஸின் தந்தை.  தனது தந்தை வழிச்சொத்துக்களை மறுதலிப்பதன்மூலம், கடனையும் ஏற்கவேண்டியதில்லை என்று நண்பர்கள் சொல்கிறார்கள். அதனை ஏற்காமல், சொத்துக்களை ஏற்று, அனைத்து கடன்களையும் அடைக்கிறான் நிக்கோலஸ் .பிரஞ்ச் படைகள் ஒவ்வொரு நகரமாக வெற்றிக் கொண்டு உள்ளே நுழையும்போது, நிலச்சுவான்தார்களான பிரபுக்கள் தமது பண்ணையை கைவிட்டு நகரத்தை விட்டுவெளியேறுகிறார்கள். அப்படி மேரியும் வெளியேற எத்தனிக்கையில் எழும் விவாசாயிகளின் கலகத்தை அழகாக சித்தரித்திருக்கிறார், தல்ஸ்தோய் . பண்ணையைவிட்டு வெளியே செல்லமுடியாதபடி, விவசாயிகள், மேரியை சிறைபிடிக்கிறார்கள். ரஷ்ய ராணுவதளபதியான நிக்கோலஸ் படைகளும் பின்வாங்கியபடியே உள்ளது. மேரியின் பண்ணைக்கு செல்லும் நிக்கோலஸ், கூடி நிற்கும் விவசாயிகளிடம் சற்று குரலை உயர்த்தியவுடன், விவசாயிகளே, விவாசாயிகளின் கலகத்தை முறியடிக்கிறார்கள். "இதெல்லாம் தப்பு பார்த்தியா?" என்று பேசியபடி கலைந்து செல்கிறார்கள். மேரியின் பொருட்களை வண்டியில் ஏற்ற உதவுகிறார்கள். "பார்த்து, உடையாம ஏத்துப்பா" என்று குரல் கொடுத்தபடி அக்கறையுடன் பொருட்களை ஏற்றுகிறார்கள். காலங்காலமாக அடிமைத்தனத்தில் வாழ்ந்த அவர்களது கலகம், நொடிப்பொழுதில் உடைந்து விழுகிறது.


மேரியை திருமணம் செய்துக் கொண்டு, தனது புது வாழ்வை துவக்கும் நிக்கோலஸுடன், செல்கிறாள் சோனியா. தனது காதலனது குடும்பத்திற்க்கு சேவகம் செய்துக் கொண்டு, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை வளர்த்துக் கொண்டு தனது வாழ்வை கழிக்கிறாள் சோனியா. 

No comments:

Post a Comment

Write your valuable comments here friends..