Monday, September 22, 2014

போரும் அமைதியும் - மானுடத்தின் மீதான பெருங்காதல் - 3

இளம்வயதிலேயே தாய்தந்தை இறந்துவிட, வயதான பாட்டியுடன் வளர்ந்தார்கள், செண்பகமும், அவளது தம்பி சீனிவாசன். செண்பகம் மிக எளிமையாக உடை உடுத்துவாள். ஆனால் அந்த எளிமையிலும் ஒரு அழகு மிளிரும்.  சீனிவாசன் இளவயதிலேயே தனது குடும்ப நிலையை கருத்தில் கொண்டு, படிப்பில் கருத்தாக இருந்தான். பி.காம் முடித்த பிறகு, தொடர்ந்து பல அரசாங்க வேலைகளுக்கு, மனு போட்டு,தகுதி தேர்வுகள் எழுதிக் கொண்டு காத்திருந்தான். ஒவ்வொரு முறையும் சீனிவாசன் தேர்வு எழுத செல்லும்போது, செண்பகம் வீட்டுக்கு வருவார். அம்மாவிடம் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, கைமாத்தாக பணம் கேட்பார். பிறகு சீனிவாசனுக்கு வங்கி வேலை கிடைத்தது. வேலை கிடைத்த சில ஆண்டுகளில், தான் கூட வேலைப் பார்த்த பெண்ணை காதல் திருமணம் செய்தான். குழந்தைகளை கான்வெண்டில் படிக்கவைத்தான் ஹிரோ ஹோண்டா பைக் வாங்கினான்.  செண்பகம் மட்டும் அதே சாயம் போன தாவணியுடன், இட்லிக்கு மாவு அரைத்து, குழந்தைகளை ஸ்கூலுக்கு கிளப்பி, தம்பி மனைவிக்கு புடவை தேய்த்துக் கொடுத்து, இருவரையும் வேலைக்கு அனுப்பி வைத்துவிட்டு, கிணற்றடியில், உட்கார்ந்து தம்பி வாங்கி கொடுத்த கையடக்க டிரான்சிஸ்டரில், “என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்” பாட்டு கேட்டாள். நாற்பதை கடந்தபின்னரும், செண்பகம் தாவணிதான் கட்டுகிறாள். இப்போதெல்லாம், தனியாக உட்கார்ந்து பேசிக் கொள்ள வேறு, கற்றுக் கொண்டுவிட்டாள்.

போரும் வாழ்வும் சோனியாவின் பாத்திரத்துக்கும், செண்பகத்துக்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. சுயநலமில்லாத உழைப்பை, எந்த குற்ற உணர்ச்சியும் ஏற்படுத்தாத வண்ணம் மற்றவர்களுக்கு வழங்க, ஒரு சிலரால் மட்டுமே முடிகிறது.



நடாஷாவின் சகோதரன் நிக்கோலஸ் ரோஸ்டோவுக்கும் சோனியாவுக்கும் இடையிலான உறவு விசித்திரமானது. ஆதரவற்ற குழந்தையாக நிக்கோலஸ் குடும்பத்தினரிடம் வந்து சேர்ந்தவள் சோனியா. பள்ளி பருவத்தில் நிக்கோலஸுக்கும் சோனியாவுக்குமிடையே காதல் மலருகிறது. முதலில், தனது அன்பை நிக்கோலஸ் பிரதிபலிக்கிறானா என்று சந்தேகபடுகிறாள். இருப்பினும் தனது அன்பை பிரதிபலன் பாராது நடாஷாவின் குடும்பத்தின் மீது பொழிகிறாள். விடுமுறைக்கு வீட்டுக்கு வரும் நிக்கோலஸின் நண்பன் டோல்கோவுக்கு சோனியாவின் மீது காதல் மலருகிறது. மிகுந்த பொருளாதார சிக்கலில் இருக்கும் நடாஷாவின் குடும்பத்திற்க்கு இந்த காதல் பொருத்தமானதாக தோன்றுகிறது. ஆனால், சோனியா அந்த காதலை நிராகரிக்கிறாள். இந்த பரிசுத்தமான அன்பை கண்டு நெகிழ்கிறான் நிக்கோலஸ் நிக்கோலஸுக்கு வசதியான பிரபுகுடும்ப பெண்ணை திருமணம் செய்வதன் மூலம், பொருளாதார சிக்கலில் இருந்து மீள நினைக்கும் அவனது தாய், சோனியாவின் காதலை விட்டுதரும்படி கோருகிறாள். அதை ஏற்று சோனியா, ராணுவத்தில் இருக்கும் நிக்கோலஸுக்கு கடிதம் எழுதுகிறாள் சோனியா.முதலில் அதை மறுக்கும் நிக்கோலஸ், காலஓட்டத்தில் மிகவும் வசதியான ஆண்ட்ருவின் தங்கை மேரியை, காதலித்து மணம் முடிக்கிறான். அவர்களுடனே தங்கி, அந்த குடும்பத்திற்க்கு பணிபுரிய தொடங்குகிறாள் சோனியா.

குற்ற உணர்ச்சியில் தவிக்கும் மேரி, நடாஷாவிடம் சோனியா பற்றி கேட்கும் போது, நடாஷா மிக எளிதாக சொல்கிறாள். சோனியா ஒரு அழகான மலட்டு மலர். மற்றவர்களுக்கு உதவியாக இருப்பதிலேயே, சோனியா தனக்கான வாழ்க்கையை வாழ்ந்துமுடிக்கின்றவள். ஒருபோதும் தனக்கு என்று அவள் வாழபோவதில்லை என.

நடாஷாவின் உயிர்தோழி சோனியா. ஆனால் நடாஷா, அனடோலுடன் ஓடிபோக எத்தனிக்கையில், இரவு முழுவதும் விழித்திருந்து அதை தடுக்கிறாள். அவ்வாறு செய்வதன்மூலம் அந்த குடும்பத்திற்க்கும், தனது காதலானான நிக்கோலஸுக்கும் தனது கடமையை செய்வதாக நினைக்கிறாள். எந்த நேரமும், அந்த குடும்பத்திற்க்கு உதவுவதிலேயே, தனது காலத்தை கழிக்கிறாள். ஆனால் அவள் மீது ஒருவருக்கும் உண்மையான அன்பும் கரிசனமும் தோன்றவில்லை. இதை அழகாக இருவரிகளில் சொல்லி செல்கிறார் தல்ஸ்தோய். நமக்கு உதவி செய்பவர்களை, நாம் காதலிப்பதில்லை. நாம் உதவி செய்பவர்களையே, காதலிக்க தொடங்குகிறோம். எவ்வளவு சரியான தரிசனம்?



காலம் முழுவதும் உதவிசெய்யும் சோனியா மறுதலிக்கபடுகிறாள். ஆனால் விவசாயிகளின் கலகத்தில் மாட்டிக் கொள்ளும் மேரியை, சரியான நேரத்தில் காக்கிறான் நிக்கோலஸ். மேரி மீது நிக்கோலஸுக்கு காதல் மலருகிறது. உதவியை ஏற்கும் போது நமது தன்னகங்காரம் காயப்படுகிறது. உதவி செய்யும் தன்னகங்காரம் திருப்தியடைகிறது. அது காதலாக கனிவு காட்டுகிறது. உண்மையில் தல்ஸ்தோய், காதல் தோல்வியால், திருமணம் செய்துக் கொள்ளாமல் வாழ்ந்த தனது அத்தை ஒருவரை வைத்தே சோனியா பாத்திரத்தை உருவாக்கியுள்ளார்.




டோல்கோவின் காதலை, நிக்கோலஸ் மீது கொண்ட பேரன்பினால் மறுக்கிறாள் சோனியா. உடனே டோல்கோவ், நிக்கோலஸை சீட்டாட்டத்திற்க்கு அழைக்கிறான். நட்பின் அடிப்படையில் என்று நினைத்து அந்த சூதாட்டவிடுதிக்கு செல்லும் நிக்கோலஸை, கொஞ்சம் கொஞ்சமாக மீள முடியாத கடனில் சிக்க வைக்கிறான், டோல்கோவ். கண்ணெதிரே சிறிதுசிறிதாக தனது பணத்தை இழக்கும் நிக்கோலஸின் மனநிலையை ஒரு சிறந்த சூதாடியினால்தான் காட்சிபடுத்தமுடியும். தல்ஸ்தோய் ஆட்டத்தின் ஒவ்வொரு நிலையிலும், நிக்கோலஸ் எவ்வாறு தன்னை இழக்கிறான் என்று விவரிக்கிறார். நாற்பத்தி மூன்றாயிரம் ரூபல்களை, டோல்கோவிடம் இழக்கிறான் நிக்கோலஸ். நாற்பத்திமூன்றாயிரம் என்பதை ஆட்டம் தொடங்கும்போதே மனதில் வைத்துக் கொள்கிறான் டோல்கோவ். ஏன் என்றால், 43 என்பது அவனது வயதையும், சோனியாவின் வயதையும் கூட்டி வரும் எண்.

ஏற்கனவே தனது ஆடம்பரத்தால், பொருளாதார சிக்கலில் விழ்ந்திருக்கும் நிக்கோலஸின் தந்தை, சூதாட்டத்தினால் ஏற்படும் கடனையும் ஏற்கிறார். நிக்கோலஸ் மனம் ஒடிந்து ராணுவத்திற்க்கே திரும்புகிறான். பிறகு காலஓட்டத்தில் வசதியான மேரியை திருமணம் செய்துக் கொள்கிறான். வைத்திருக்கும் சொத்துக்களை விட இருமடங்கு கூடுதலான கடனுடன் செத்துபோகிறார் நிக்கோலஸின் தந்தை.  தனது தந்தை வழிச்சொத்துக்களை மறுதலிப்பதன்மூலம், கடனையும் ஏற்கவேண்டியதில்லை என்று நண்பர்கள் சொல்கிறார்கள். அதனை ஏற்காமல், சொத்துக்களை ஏற்று, அனைத்து கடன்களையும் அடைக்கிறான் நிக்கோலஸ் .



பிரஞ்ச் படைகள் ஒவ்வொரு நகரமாக வெற்றிக் கொண்டு உள்ளே நுழையும்போது, நிலச்சுவான்தார்களான பிரபுக்கள் தமது பண்ணையை கைவிட்டு நகரத்தை விட்டுவெளியேறுகிறார்கள். அப்படி மேரியும் வெளியேற எத்தனிக்கையில் எழும் விவாசாயிகளின் கலகத்தை அழகாக சித்தரித்திருக்கிறார், தல்ஸ்தோய் . பண்ணையைவிட்டு வெளியே செல்லமுடியாதபடி, விவசாயிகள், மேரியை சிறைபிடிக்கிறார்கள். ரஷ்ய ராணுவதளபதியான நிக்கோலஸ் படைகளும் பின்வாங்கியபடியே உள்ளது. மேரியின் பண்ணைக்கு செல்லும் நிக்கோலஸ், கூடி நிற்கும் விவசாயிகளிடம் சற்று குரலை உயர்த்தியவுடன், விவசாயிகளே, விவாசாயிகளின் கலகத்தை முறியடிக்கிறார்கள். "இதெல்லாம் தப்பு பார்த்தியா?" என்று பேசியபடி கலைந்து செல்கிறார்கள். மேரியின் பொருட்களை வண்டியில் ஏற்ற உதவுகிறார்கள். "பார்த்து, உடையாம ஏத்துப்பா" என்று குரல் கொடுத்தபடி அக்கறையுடன் பொருட்களை ஏற்றுகிறார்கள். காலங்காலமாக அடிமைத்தனத்தில் வாழ்ந்த அவர்களது கலகம், நொடிப்பொழுதில் உடைந்து விழுகிறது.


மேரியை திருமணம் செய்துக் கொண்டு, தனது புது வாழ்வை துவக்கும் நிக்கோலஸுடன், செல்கிறாள் சோனியா. தனது காதலனது குடும்பத்திற்க்கு சேவகம் செய்துக் கொண்டு, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை வளர்த்துக் கொண்டு தனது வாழ்வை கழிக்கிறாள் சோனியா. 

Saturday, September 20, 2014

போரும் அமைதியும் - மானுடத்தின் மீதான பெருங்காதல் - 2

போரும் அமைதியும் நாவலின் ஆரம்பத்தில், அன்னா பாவ்லோனா என்ற மேட்டுகுடி பெண்மணி ஏற்பாடு செய்துள்ள விருந்தில் விரும்பதகாத விருந்தாளியாக நுழைகிறான் பியர். முறைகேடாக பிறந்த மகன் என்பதால் பிரபுக்கள் சமூகத்தில் எந்த மரியாதையும் இல்லாமல் வாழும் பியருக்கு, ஒரு கட்டத்தில் தனது தந்தை மூலம் ஏராளமான சொத்துக்கள் கிடைக்கபெறுகிறது. அதே சமூகம் பியரை தங்கத்தட்டில் வைத்து தாங்குகிறது.

இந்த நாவல் முழுவதும் வரும் பியர், ஆன்மிகமான தேடல் உடையவனாக இருக்கிறான். பியரால், ஒரே சமயத்தில், ஊதாரியாக சுற்றி வரும் அனடோலுடனும், மேலான நெறிகளை கொண்டவனான ஆண்ட்ருவுடனும் நட்புப் பாராட்டமுடிகிறது.



ஆண்ட்ருவின் தந்தை நிக்கலாஸ் போல்கன்ஸ்கி மாஸ்கோவைவிட்டு வெகுதூரம் தள்ளியுள்ள தனது மாளிகையில் வசிக்கிறார். தனது காலத்தில் இருந்து வெகுவாக மாறிவிட்ட உலகின் மீது உள்ள வெறுப்பை எல்லாம் தனது மகள் மேரியிடம் காட்டுகிறார்.  அவ்வாறு வெறுப்பை காட்டுவதினாலயே குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி, அந்த குற்ற உணர்ச்சியை போக்குவதற்க்காக மீண்டும் மேரியின் மீது வெறுப்பை கொட்டுகிறார். மாறிவிட்ட உலகின் அனைத்து விஷயங்கள் மீதும் நிக்கலாஸுக்கு எள்ளல் இருக்கிறது. மனைவியை இழந்துவிட்ட அவருக்கு பெண்கள் தேவையில்லாத சுமையாக தெரிகிறார்கள். அவர்களால் எதையும் சரியாக செய்யமுடியாது என்று அலுத்துக் கொள்கிறார். அவருடன் வாழ்க்கை முழுவதும் வேலை பார்த்த உதவியாளன், தனது முதலாளியின் கோச் வண்டியில் நகரத்திற்க்கு போகும் போது, ஓ.. இந்த பெண்கள் ! என்று தனதுமுதலாளியின் பிம்பமாய், அலுத்துக் கொள்கிறான். உலகின் ஒழுங்கின்மை எந்த வகையிலும் தன்னை எதுவும் பாதிக்காத வகையில், மகளுக்கு கணித வகுப்பு, கட்டிட வேலைகள் என்று தொடர்ந்து இயங்கி தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பாடுபடுகிறார் நிக்கலாஸ்.

நாட்டுப்பற்றும், கடமை உணர்வும் கொண்ட ஆண்ட்ரு, நெப்போலியனை தடுத்து நிறுத்துவதற்க்கான போரில் ஈடுபட, கர்ப்பிணி மனைவியை தனது தந்தை வசம் ஒப்படைத்துவிட்டு, செல்கிறான். செயற்கரிய செயல்கள் செய்த நெப்போலியனை பார்க்கவேண்டும் என்ற ஆவல் கொண்டவனாய் போரில் ஈடுபடும் ஆண்ட்ரு காயம்பட்டு விழுகிறான். போரில் மடிந்துகிடக்கும் எண்ணற்றவர்கள் மத்தியில் காயத்துடன் விழுந்து கிடக்கும் ஆண்ட்ரு, ஆகாயத்தை பார்க்கிறான். அங்குதான் எவ்வளவு அமைதி? என்று வியக்கிறான். யாரை தனது ஆதர்ஸ நாயகனாக நினைத்து வாழ்நாள் முழுவதும் ஏங்கினானோ அந்த நெப்போலியன் போர்களத்தில் விழுந்து கிடக்கும் தனது அருகே வந்து நிற்கும் போது, ஆண்ட்ரு ஆகாயத்தின் பேரமைதியை வியந்தபடி கிடக்கிறான்.



ஆண்ட்ருவுக்கும் நடாஷாவுக்கும் இடையிலான காதல் பல்வேறு பரிமாணங்களை கொண்டதாக இருக்கிறது. முதலில் இருவருக்குமிடையே தீவிரமான காதல் உருவாகிறது. பிறகு, நடாஷாவின் மனமாற்றத்தால் உடைகிறது.  அனடோலுடன் வெளியேறுவதற்க்கு முன்பே தடுத்து நிறுத்தபடுகிறாள் நடாஷா. அனடோல் பற்றிய உண்மைகள் தெரியவர, மனம் உடைந்தவளாய் அறையைவிட்டு வெளியே வராமல் இருக்கிறாள். போரிலிருந்து திரும்பிவரும் ஆண்ட்ரு நடாஷாவை ஏற்க மறுக்கிறான். அனடோல் ராணுவத்தில் சேர்ந்துவிட்டதை அறிந்து, அவனை தண்டிக்க நினைக்கிறான் ஆண்ட்ரு. பிரஞ்ச் படைகளுடனான போரில் படுகாயம் பட்டு மருத்துவமனையில் கிடக்கையில், பக்கத்து படுக்கையில் இருக்கும் ஒருவனுக்கு கால் துண்டிக்கபடுகிறது. அரைகுறை மயக்கத்தில் அவனை உற்றுப் பார்க்கிறான் ஆண்ட்ரு. அது வேறு யாருமல்ல அனடோல்தான். அனடோல் தண்டனை பெறுவது மாறா பிரபஞ்ச விதியான அறத்தின் அடிப்படையில் என்றால், ஆண்ட்ருவும் அதே நிலையில் கிடப்பது எதன் அடிப்படையில்?

மரணபடுக்கையில் கிடைக்கையில், மாஸ்கோவை விட்டு வெளியேறும் நடாஷா குடும்பத்தினரிடம் வந்து சேர்கிறான் ஆண்ட்ரு. நடாஷா இரவு பகல் பாராது அவனுக்கு பணிவிடை செய்து அவனருகேயே கிடக்கிறாள். மீண்டும் தனது காதலை கண்டுக்கொள்கிறான் ஆண்ட்ரு. மரணம் அடையும் தருவாயில் தனது நடாஷா, தனக்கு திரும்ப கிடைத்த விசித்திரத்தை நினைத்தபடி படுக்கையில் கிடக்கிறான், ஆண்ட்ரு. மரணம் ஒரு விடுதலை. சந்தித்தே ஆக வேண்டிய ஒரு எளிய நிகழ்வு என்று புரிந்துகொள்கிறான் ஆண்ட்ரு.. இப்போது எந்த குழப்பமுமின்றி, சாவை எதிர்நோக்கியபடி காத்திருக்கிறான்.

பியரின் காதலோ, ஒரு எளிய தற்செயலாக மலர்கிறது. ஒரு விருந்தில் ஹெலனை சந்திக்கும் பியர் காமத்தால் உந்தபடுகிறான். தனது வழக்கபடி எந்த முடிவும் எடுக்கமுடியாமல் திணறி, தன்னை சுற்றி உள்ளவர்களால் உந்தித் தள்ளப்பட்டு, ஹெலனை திருமணம் செய்துக் கொள்கிறான். ஒரு சில நாட்களிலேயே தான் விரும்பியது ஹெலனை அல்ல என்று புரிகிறது. அதையும் மீறி, அவனுடைய ஆன்மிக தேடல்களால் அலைகழிக்கபடுகிறான் பியர். ஒரு ரகசிய மத குழுவில் இணைந்து கொஞ்ச காலம் செயல்படுகிறான். தன்னுடைய எஸ்டேட்டில் பண்ணையாட்களாக உள்ளவர்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று கல்விகூடங்கள் ஏற்படுத்துகிறான். உண்மையில் கல்வியால் அவர்களுக்கு என்ன பயன் என்று குழம்புகிறான். ஒரு சில நாட்களில் அந்த குழுவில் இருந்து வெளியேறுகிறன்.

பியரின் பாத்திரம் ஏறக்குறைய டால்ஸ்டாய்தான் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள். எதிலுமே அமைதியடையாமல் அலைந்து திரியும் பியரின் மீட்சி, பிளாட்டேன் காரடேவ் மூலம் சாத்தியமாகிறது. எளிய குடியானவனான பிளாட்டேன், சந்தர்ப்ப சூழ்நிலையால் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்ற நேர்கிறது. பிறகு பிரஞ்ச் படையினரிடம் பிடிப்பட்டு முகாமில் வசிக்கிறான், பிளாட்டேன். பிரஞ்ச் படைகள் மாஸ்கோவை கைப்பற்றிய பின்னரும் அங்கு இலக்கின்றி சுற்றி திரியும் பியரை, பிரஞ்ச் ராணுவம் கைது செய்து அதே சிறையில் அடக்கிறது. பிளாட்டேன், வாழ்க்கை முழுவதும் கடும் உழைப்பையும், கொடுமையான தனிமையையும் கொண்டவனாக இருக்கிறான். தான் ராணுவத்துக்கு வந்தது மூலம் தனது குடும்பம் நிம்மதியாக வாழ்வதை கண்டு, ஒரு எளிமையான விவசாயிக்கு எந்த விதத்திலும் பொருந்தாத, ராணுவ பணிக்கே மீண்டும் திரும்புகிறான். அப்படி ராணுவத்துக்கு திரும்புகின்ற நாளில், பிளாட்டேனின் தந்தை, சகோதரர்கள் அனைவரையும் அழைத்து பிளாட்டுனின் காலில் விழ செய்கிறார். பிளாட்டேனுக்கு பிறந்த ஒரே பிள்ளையும் சிறு வயதில் இறந்துவிடுகிறது. ஆனால், அவனுக்கு யார் மீதும், எதன் மீதும் எந்த குற்றச்சாட்டுமில்லை. வாழ்க்கையை சிறிய புல் போன்ற எளிமையுடன், உண்மையை மட்டும் துணையாக கொண்டு எதிர்கொள்கிறான். தனக்கு என்று எதையும் இறுக்கிவைத்துக் கொள்ளாத அவனுக்கு எந்த துன்பமுமில்லை. அவனுக்கு என எந்த நண்பர்களுமில்லை. ஆனால் எதிர்படும் எல்லா மனிதர்களுடனும் அவனால் நட்பு பாராட்ட முடிகிறது, உதவ முடிகிறது. 

முகாமில் பகல் முழுவதும் கடுமையாக உழைத்துவிட்டு இரவு பொழுதில் கதை பேசியும் பாடியும் பொழுதை கழிக்கிறான் பிளாட்டேன். தனக்கு தெரிந்த பாடல்களை தனக்கு வருகின்ற ராகத்தில் பாடுகிறான். குற்றமே செய்யாமல், சிறையில் வாழ்நாள் முழுவதும் கழித்து இறுதியில் குற்றமற்றவன் என தெரிந்து விடுதலை செய்தி வருகின்ற போது, சிறையிலேயே இறந்துவிடுகின்ற ஒரு அப்பாவி கைதியை பற்றிய கதையை, திரும்ப திரும்ப சொல்கிறான்.   அந்த அப்பாவி கைதியை அரசாங்கம் விடுவிக்கும் முன், இறைவன் விடுவித்துவிட்டான் என்று சொல்லி அமைதியில் ஆழ்கிறான். இறப்பு என்பது விடுதலை மட்டுமே என்று பிளாட்டேன் சிந்திக்கிறான். 




மாஸ்கோவை கைப்பற்றியப் பிறகு பிரஞ்சு படையினர், நீண்ட கால போரினால் மன உளைச்சல் மற்றும் களைப்பினால் கட்டுபாட்டை இழக்கின்றார்கள். ரஷ்யாவின் படைகள் தொடர்ந்து பின்வாங்கும் தந்திரம் மூலம் பிரஞ்சு படையை சோர்வடைய செய்கிறது. வெற்றியுமில்லாமல், தோல்வியுமில்லாமல், தொடரும் இந்த நீண்டநெடியபோரினால், கடுஞ்மனசோர்வுக்கு ஆளாகும் பிரஞ்ச் படையினர் தம்மிடம் உள்ள கைதிகளை வேறு இடத்திற்க்கு நடத்தி அழைத்து செல்கிறார்கள். நடக்க முடியாமல் பின் தங்குபவர்களை நாயை சுடுவது போல் சுட்டுக் கொல்கின்றனர். பிளாட்டேன், இனி நடக்க விரும்பாது ஒரு மரத்தடியில் அமர்கிறான். அவனிடம் வந்து பேசும் பிரஞ்ச் ராணுவத்தினன், துப்பாக்கியை எடுக்கிறான். அதை பார்க்கும் பியர், எந்த சிந்தனையுமின்றி முன்செல்கிறான். பிளாட்டேன் சுட்டுக் கொல்லப்பட்ட பின் அவனிடம் வளரும் நாய் ஊளையடுகிறது. எதற்க்கு இப்படி இந்த முட்டாள் நாய் ஊளையடுகிறது என்று எண்ணியபடி முன்செல்கிறான் பியர். மரணம் குறித்தல்ல, மரணம் குறித்தான பிளாட்டேனின் கருத்துக்கு அஞ்சியே பியர் அந்த சாவை தெரிந்துக் கொள்ள விரும்பாது முன்செல்கிறான். பிளாட்டேன் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டான் என்று அவனுக்கு உரைக்கும்போது, பல ஆண்டுகளுக்கு முன் பெரிஸிய அழகியுடன், தனது பங்களாவின் வராந்தாவில் கூடலில் ஈடுபட்டது அவனுக்கு நினைவு வருகிறது.  சாவின் மர்மத்துடன், காமத்தை இணைக்கிறார் தல்ஸ்தோய்.  

பியரின் தேடல் முடிவுக்கு வருகிறது. பிளாட்டேனிடம் இருந்து, எல்லையில்லா அன்பை கற்கிறான் பியர். சக உயிர்களை நேசிக்க எந்த காரணமும் தேவையில்லை என்ற முடிவுக்கு வருகிறான். மனிதர்களை கண்டவுடன் அவனுக்குள் அன்பும் பெருங்கருணையும் ஊற்றெடுக்கிறது. இந்த ஞானத்தை அடையாமல், தனது மனைவி ஹெலன் இறந்துவிட்டாளே என்று பரிதாபபடுகிறான். அதற்க்கு பிறகு அவனுக்கு எந்த துன்பமுமில்லை. பிளாட்டேன் தன்னை, பியருக்குள் விதைத்துவிட்டு, சென்றுவிடுகிறான். 

பிளாட்டேன் போன்ற மண்ணுடன் நேரடியான உறவில் இருக்கும் எளிய விவசாயிகளே, ஆன்மிக ஞானத்தை எளிதில் அடைவார்கள் என்று தல்ஸ்தோய் காட்டுகிறார். 

போரும் அமைதியும் - மானுடத்தின் மீதான பெருங்காதல் - 1

எங்கள் தெருவிற்க்கு புதிதாக வந்தாள் துளசி. வங்கி பணியில் இருந்த தனது தந்தை மற்றும் தாயுடன் மாற்றலாகி எங்கள் ஊருக்கு வந்திருந்தாள். ஏறக்குறைய நகரின் அனைத்து இளம்பெண்களும் அப்போது சுடிதாருக்கு மாறியிருக்க, இவள் மட்டும் தாவணியில், தேவதை போல் வலம் வந்தாள். ஊரில் இருந்த அனைத்து இளைஞர்களுக்கும், எங்கள் தெருவில், நண்பர்கள் இருப்பது அப்போதுதான் ஞாபகம் வந்தது . ஆனால், தனது அழகு மற்றவர்களை என்னசெய்கிறது என்பதை பற்றி கொஞ்சமும் அறியாத குழந்தைபோல், துளசி இருந்தாள். கல்லூரிவிட்டால் வீடு, அவ்வபோது தனது தாயுடன் பெரிய கோயில் என சிறிய வட்டம். அதிர்ந்து பேசாத தன்மை, படிப்பில் கெட்டி என அவளைப் பற்றி வந்த அனைத்து செய்திகளுமே இனியவையாக இருந்தது.

அதே துளசி, பெண்களை வளைப்பதையே தன் வாழ்வின் லட்சியமாய், எந்த வேலையுமின்றி, தந்தையின் காசில் சுற்றிவரும் அசோக்குடன், பைக்கில் கட்டிஅணைத்தபடி, முவாநல்லூர் சாலையில் செல்கிறாள் என்று சரவணன் வந்துச்சொன்னபோது வாழ்வின் அபத்தத்தை நினைத்து சிரிப்புதான் வந்தது. பிறகு, எத்தனையோ பெண்கள்.. மீண்டும், மீண்டும் காதல் என்ற பேரில், பேசிபழகும் வாய்ப்பு கிடைத்த ஒரே காரணத்தினால் ,எந்த வகையிலும் இந்த உலகில் தமது இருப்பை நியாயபடுத்த முடியாத முட்டாள்களுடன் ஓடிப்போய், வாழ்க்கையை தொலைத்துவிட்டு வந்து நின்றதை பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

பேரழகியும், முன்காலைபனி போன்ற புனிதமும் கொண்ட நடாஷாவை, இன்னொருவனுக்கு நிச்சயமானவளை, பொறுப்பற்று சுற்றிவரும் அனடோல் கவர்கிறான். அடுத்தவேளை உணவுக்கான சாத்தியம் கூட இன்றி, ஓடிப்போக திட்டமிடுகிறார்கள். ஏற்கனவே திருமணமான அனடோலுடனான கனவு வாழ்க்கையை பற்றி கற்பனையில் திளைக்கிறாள் நடாஷா. இது எப்படி சாத்தியமாகிறது, என்பதை டால்ஸடாய் காட்சிபடுத்துகிறார். ஒரு விருந்தில், நடாஷாவை சந்திக்கும் அனடோல், அவளது அழகு பற்றியே பேசுகிறான்.  அவளது அழகு தன்னை எப்படி பாதிக்கிறது என்பதை தொடர்ந்து வெளிப்படுத்துகிறான். பிறகு அவனது சகோதரியும் நடாஷாவை சந்திக்கும்போது, எப்படியெல்லாம் அனடோல், நடாஷாவினால் ஈர்க்கப்பட்டுள்ளான் என்று சிரித்துக் கொண்டே சொல்கிறாள்.

முட்டாள்களுக்கே உரிய அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையுடன் வலம் வருகிறான் அனடோல். தனது ஊதாரித்தனம் பற்றியோ, பொறுப்பின்மை பற்றியோ ஒருபோதும் அவன் சுயமதிப்பிடுகளுக்கும் சந்தேககங்களுக்கும் ஆளாவதில்லை. அதனாலயே அவனிடம் எந்த தயக்கங்களும் இல்லை. அனடோலாகிய நான் இப்படிதானே இருக்கமுடியும் என்று சுற்றிவருகிற தன்னம்பிக்கை நடாஷாவை ஈர்க்கிறது.

இப்போது யோசித்துப் பார்த்தால் அசோக்,அனடோல் இருவருக்கும் உள்ள ஒற்றுமைகள் புலப்படுகிறது. வாழ்க்கை பற்றி தீர்மானமான முடிவுகளுடன் இவர்கள் இருப்பது போன்ற போலித்தோற்றமே பெண்களை ஈர்க்கிறது. இவர்கள் வாழ்வில் உள்ள சாகஸத்தன்மையே நடாஷாக்களை கனவினில் தள்ளுகிறது. அவர்கள் வெளிப்படையான புகழ்ச்சியுரைகளை பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள், சமூகத்தின் மதிப்பீடுகளை புறந்தள்ளக்கூடிய இவர்களது அலட்சியம், துளசி போன்று சமூகத்தின் மதிப்பீடுகளோடு வளர்க்கப்பட்டிருப்பவர்களுக்கு மயக்கத்தை தருகிறது.

இவ்வளவு நுட்பமாக தனது போரும் அமைதியும் காவியத்தில், மனித உணர்வுகளை எழுதமுடிந்ததாலேயே தல்ஸ்தோய் இவ்வுலகின் மகத்தான நாவலாசிரியனாக போற்றபடுகிறான்.



நெப்போலியனின் படையெடுப்பை கதைகளனாக வைத்துக்கொண்டு, ரஷ்ய பிரபு குடும்பங்களை கதைமாந்தர்களாக்கி வாழ்வின் பொருளை, மகத்தான வரலாற்று சம்பவங்களின் பிண்ணனியில் உள்ள, தற்செயல்களை, வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கும் சிறு நிகழ்வுகளை, மனித உணர்வுகளை, ஆன்மிக தேடல்களை விவரிக்கிறது லியோ தல்ஸ்தோய் 1869ல் எழுதிய போரும் அமைதியும் என்ற காவியம்.

19ம் நூற்றாண்டில், 1806க்கும், 1813க்கும் இடைப்பட்ட காலக்கட்டம். நெப்போலியனின் படைகள், ஐரோப்பிய நாடுகளை வெற்றிக் கொள்ளும் வெறியில், சில நாடுகளை வென்ற வெற்றிக் களிப்பில் ரஷ்யாவுக்குள் நுழைகிறது. பிரஞ்சு படைகளின் படையெடுப்பை பற்றியும், நெப்போலியனின் போர்வெறியை பற்றியும், ஒரு விருந்தில், ரஷ்ய பிரபுகுடும்பத்தினர் பிரஞ்ச் மொழியில் பேசிக்கொள்ளும் போலித்தனத்தில் ஆரம்பிக்கிறது நாவல்.ஏறக்குறைய அனைத்து ரஷ்ய பிரபுக்களும், ராணுவதளபதிகளும் பிரஞ்சில் பேசிக் கொள்கிறார்கள். பிரஞ்சு மொழி மேட்டுகுடியினரின் மொழியாக மகுடம் சூட்டியிருக்கிறது. நாவல் முழுவதும் நிலப்பிரபுக்கள் விருந்துகள் கொடுக்கிறார்கள், போகத்தில் திளைக்கிறார்கள். ஆடம்பரமான உணவுவகைகளை தயாரித்து தங்களது விருந்தினர்களை மகிழ்விக்கிறார்கள். எண்ணற்ற பண்ணையாட்களை கொண்டு பண்ணைகளை பராமரிக்கிறார்கள். அவர்களுடைய கடமை உணர்வு, மேன்மை, கீழ்மை, போலித்தனம், கட்டுபாடு என அனைதையும் விமர்சிக்கிறார் தல்ஸ்தோய் . நிலபிரபுக்களில் ஒருவராய் ஏராளமான சொத்துக்களை கொண்டிருந்தவர் தான் டால்ஸ்டாய். ஒருகாலக்கட்டத்தில் இந்த நாவலில் வரும் பியரை போலவே தனது சொத்துக்களை பண்ணையாட்களின் நலனுக்கு செலவழித்ததார். பண்ணையாட்களை கொத்தடிமையிலிருந்து விடுவித்தார். எப்போதும் அறத்திற்க்கான குரலாய் தல்ஸ்தோய் இருந்தார். போரும் வாழ்வும் நாவலின் அடித்தளம் அறமும், மானுடத்தின் மீதான நேசமும் தான்.



தல்ஸ்தோய் , தனது சமகாலத்திய இலக்கியங்களை, உலக காப்பியங்களை தேடிதேடி படிப்பவராக இருந்திருக்கிறார்.  பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த அவரது நூலகத்தில் இருபதாயிரத்துக்கும் அதிகமான நூல்கள் இருந்திருக்கிறது.  தல்ஸ்தோய் , தமிழ்மொழியின் அறநூலான திருக்குளை நேசித்திருக்கிறார். மகாத்மா காந்திக்கு எழுதிய கடிதத்தில் திருக்குறளை, ஹிந்துகுறள் என்று சொல்லி மேற்கோள்காட்டியிருக்கிறார். கீதையை பற்றி பேசியிருக்கிறார். ஆன்மிகசாரத்தை தனது பலமாக கொண்ட நாடான இந்தியாவை, எண்ணிக்கையில் பலமான இந்தியாவை, எந்த தத்துவபலமும் இல்லாத இங்கிலாந்து எப்படி வென்றிருக்க முடியும் என்று ஆச்சரியபடுகிறார் காந்திக்கான கடிதத்தில். காந்தி தனது பாதையாக அகிம்சையை தேர்ந்தெடுத்ததில் மிகமுக்கியமான பங்கு தல்ஸ்தோய்க்கு இருந்திருக்கிறது.