Tuesday, March 17, 2015

பொய்த் தேவு - வினாடிக்கொரு தெய்வம்

வாழ்வின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும், ஒவ்வொரு விஷயம் பிரதான லட்சியமாய்த் தோன்றி வாழ்வை நிகழ்த்திச் செல்கிறது. அந்த லட்சியத்தை அடைந்த பின்னரும், மனம் அமைதியடைந்து நிலைக் கொள்வதாய் இல்லை. இந்த நொடி அடையவிரும்பும் மகோன்னத லட்சியம், அடுத்த நொடியில் எந்த பொருளுமின்றி உள்ளீடு அற்று, அந்த லட்சியத்தை அடைய விரும்பிய நம்மை கேலி செய்தபடி நிற்கிறது. உண்மையில் இந்த உலகவாழ்க்கைக்கு எந்த பொருளுமிருப்பதாய் தெரியவில்லை. இப்படியான உலகவாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்தின் மீதும் ஒற்றைப்படையான பற்றும், வெறியும் கொண்டு அதனை அடையும் முயற்சியில், தமது வாழ்வையே இழப்பவர்கள், இறுதியில் ஏமாற்றத்தையும், வலியையுமே அடைய நேர்கிறது.அரை ரூபாய் இருந்தால் சாத்தனூர் கடைத் தெருவையே வாங்கலாம். ஐந்து ரூபாய் இருந்தால் கும்பகோணம் கடைத் தெருவையே வாங்கலாம். பத்து ரூபாய் இருந்தால் இந்த உலகையே வாங்கலாம் என்று தனது லட்சியத்தை கண்டுக் கொள்ளும் சிறுவன் சோமு முதலியின் கதைதான், தமிழ் இலக்கியத்தின் மிக சிறந்த விமர்சகர் என்று போற்றப்படும் க.நா.சுப்ரமணியம் அவர்கள்(1912-1988) 1942ல் எழுதிய பொய்த் தேவு நாவலின் கதைக் களம்.

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் என்னும் சிற்றூரில், கருப்பன் என்ற ரவுடிக்கும், வள்ளியமைக்கும் பிறந்த சோமு முதலி, தனது வாழ்க்கையை தானே உருவாக்கி கொள்கிறான். சோழமன்னர்களால் கட்டப்பட்ட சிவன் கோயில் மணியோசைதான் சோமுவின் முதல் ஞாபகமாக பதிவாகிறது. கருப்பனின் எதிரியால் எடுத்துச் செல்லப்பட்டு அடித்து நொறுக்கபடும் கணத்தில், இந்த உலகம் பற்றிய வியப்பே சோமுவின் மனதில் இருக்கிறது. விவசாயம் செய்யும் குடியானவர்கள், பானை செய்யும் குயவர்கள், பிசாசு ஓட்டுபவர்கள், வாழைப்பழ கடை, பட்டாணி கடை என சாத்தனூரிலேயே பார்த்து தீராத அற்புதங்கள் சோமுவிற்க்கு உண்டு. அந்த அற்புதங்கள் வழியாக உலக அனுபவத்தை கண்டுக் கொள்ளும் சோமுவிற்க்கு பள்ளிகூடம் சென்று படிக்க ஆசை பிறக்கிறது.

தனது அம்மா வேலைப்பார்க்கும் அய்யமார் வீட்டு திண்ணையில் உட்காரவைக்கப்படும் சோமு, தானாகவே நடந்து உள்ளே சென்று, அங்கு கிடக்கும் துணியில் படுத்து தூங்கி,. பிறகு புளியமிளாறால் எழுப்பப்பட்டு தீண்டாமையை கண்டுக் கொள்கிறான். தன்னுடைய தேவை என்ன என்பதில் சோமுவிற்க்கு நாவலின் இறுதி கணம் வரை ஒரு குழப்பமுமிருப்பதில்லை. ஊர் பெரிய மனிதர் ரங்காராவிடம் வேலைக்கு சேரும் சோமு, முதல் நாளே சாயவேட்டி வேண்டும் என்று சொல்லி அதை பெற்றுக் கொள்கிறான். பிறகு தனது அறிவுகூர்மை மற்றும் துணிச்சலினால், தன்னுடைய எஜமானனை, கொள்ளைக்கூட்டத்திடமிருந்து காப்பாற்றும் சோமு, பிரதி உபகாரமாக தன்னுடைய படிப்பாசையை நிறைவேற்றிக் கொள்கிறான்.  

கொஞ்சகொஞ்சமாக தான் பிறந்த மேட்டுத் தெருவின் சகல கீழ்மைகளிலிருந்தும் வெளியேவந்துவிட்டோம் என்று நினைக்கிற பொழுதில், குடியும், பெண் சகவாசமும் சோமுவை பிடித்துக் கொள்கிறது. தனது தந்தை கருப்பனை போலவே குடித்துவிட்டுவந்து மனைவியை அடித்து நொறுக்குகிறான். மனைவி இறந்தபின் பாப்பத்தியம்மாளை சேர்த்துக் கொள்கிறான். பிறகு ரங்காராவின் மருமகன் சம்பாமூர்த்தியின் மூலம் தனது லட்சியமான மளிகைகடையை சாத்தனூரில் திறந்து மளிகை மெர்செண்டு சோமு முதலியார் ஆகிறான். அங்கிருந்து தனது அடுத்த லட்சியமான பணத்தை நோக்கி பயணிக்கிறான். செல்லுமிடமெல்லாம் தனது வாக்கு சாதூர்யத்தாலும், வெறித்தனமான உழைப்பாலும் மேன்மேலும் உயர்ந்து கும்பகோணத்தில் மிகப் பெரிய மனிதர்களுள் ஒருவனாகிறான்.ரங்காராவின் மருமகன் சம்பாமூர்த்தியோ, அளவுகடந்த தானதர்மத்தாலும், பக்தியாலும் சொத்துக்களை இழந்து, மனைவியும் இறந்த பின், தஞ்சை சென்று பாலாம்பாள், கமலாம்பாள் என்னும்  சகோதரிகளிடம் சிக்கி கொள்கிறார். அவரை பற்றி இவ்வாறாக பெருமூச்சுடன் நினைத்து பார்க்கிறார் சோமு முதலியார். “ஏதோ இந்த கணத்தின் தடுமாற்றத்தால், பெண்களிடம் விழுந்து கிடக்கும் சம்பாமூர்த்தியால் எந்த நேரமும் அந்த வலையிலிருந்து மீள முடியும். அப்படி மீள்வதற்க்கான ஆன்ம பலம் அவருடைய பக்தியால் அவருக்கு கிடைக்கப்பெற்றிருக்கிறது.” உண்மையில் அப்படிதான் ஆகிறது. சம்பாமூர்த்தியை மிட்க செல்லும் சோமு முதலியார் அந்த பெண்களிடம் மாட்டிக் கொள்கிறார். சம்பாமுர்த்தி தூக்கத்திலிருந்து மீண்டவர் போல, மீண்டும் பாண்டுரங்கன் கோஷம் சொல்லி சாத்தனூருக்கு திரும்புகிறார்.

வணிக கூட்டமைப்பிற்க்கு தலைவராகி, நாட்டின் பல சூழ்நிலைகளையும் தமக்கு சாதகமாக்கி பணத்தை குவிக்கிறார் சோமு முதலியார். கும்பகோணத்திலேயே மிகப்பெரிய பங்களாவை கட்டி சாத்தனூரைவிட்டு வெளியேறுகிறார். ஏதேச்சையாக தனது பழைய வாத்தியார் சுப்ரமணிய அய்யரின் மகன் சாமாவை சந்திக்கிறார். இலட்சிய வேகமும், படிப்பும் கொண்ட சாமா, அவரை நிராகரிக்கிறான். அவனை எப்படியாவது தனது பங்களா திறப்புவிழாவிற்க்கு அழைப்பதன்மூலம் அவனது அங்கீகாரத்தை வேண்டி நிற்கிறார் சோமு முதலியார். எதை தனது வாழ்வின் லட்சியமாக, வெற்றியாக கொண்டிருக்கிறாரோ, எதை அடைந்துவிட்டோம் என்று ஒவ்வொரு கணமும் நினைத்து மகிழ்கிறாரோ, அது சாமா போன்ற ஒருவனுக்கு ஒரு பொருட்டே இல்லை என்கிற உண்மை சோமு முதலியாரை குடைகிறது. சம்பாமூர்த்தி பாண்டுரங்கனை வழிபட சென்று, அவனது பாதங்களிலேயே உயிர் நீத்த செய்தி வாழ்வின் இன்னொரு கோணத்தை காட்டுகிறது.

தனது வைப்புக்களான பாலாம்பாள், கமலாம்பாள் சகோதரிகளிடம், தனது மகன் நடராஜன் கொஞ்சிகுலாவி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். மேட்டுத் தெரு கருப்பன், தன்னை விடாமல் தொடர்வதை உணர்ந்து கொள்கிறார். சிவன் கோயில் மணியோசை காதுகளில் ஒலிக்க தொடங்குகிறது. வாழ்வின் பொருள் என்னவென்று சோமு முதலியா கண்டுக் கொண்டார். இனி அவருக்கு சலனங்கள் இல்லை.  இறுதியில் சிறைச் சென்று மீண்டு, பண்டாரமாக மாறி சாலையில் இறக்கும் சோமு பண்டாரம் சொல்வதாக வருகிறது இந்த வரிகள். “இந்த உலகம் தோன்றியதில் இருந்து எவ்வளவு வினாடிகள் உண்டோ அவ்வளவு தெய்வங்கள் உண்டு இனி பிறக்கபோகும் ஒவ்வொரு வினாடிக்கும் ஒரு தெய்வமுண்டு”

உண்மைதானே? இந்த வினாடிக்கான தெய்வம் அடுத்த வினாடிக்கு பொருந்துவதில்லை. சென்ற நொடிக்கான தெய்வம் இந்த நொடிக்கு பொய்த் தேவு (பொய்த் தெய்வம்) ஆகிவிடுகிறது., முழுமுதல் தெய்வம் என ஒன்றில்லை. வாழ்க்கை என்பதே சிறிய விஷயங்களால் ஆனதுதானே. இங்கு முழுமுதல் தெய்வம் பொய்த் தேவாக முடிவதற்க்கே சாத்தியம் அதிகம்.

மிக இயல்பான நடையில், மூன்றாம் மனிதர் சோமுவின் வாழ்வை சொல்லிசெல்லும் தொனியில் கதை அமைந்துள்ளது. வாழ்க்கை மீதான தனது தரிசனத்தை, சோமுவின் வாழ்வின் மூலம் சொல்கிறார் க.நா.சு. ஒரு நாவலுக்குண்டான முழுமை இந்த வாழ்க்கை தரிசனத்தால் கூடிவந்துள்ளது. காவிரிக் கரை, அந்தக் கால தஞ்சை மண்ணின் சித்தரிப்புக்கள் என நாவல் சில பக்கங்களிலேயே நம்மை ஈர்த்துக்கொள்கிறது.கருப்பன் இருக்கும்போதும் அவன் போன பிறகும் வள்ளியம்மையிடம் ஏற்படும் மாற்றங்கள், எந்த உறவுமில்லாது, தனது வாழ்க்கையை சோமுவிற்க்காக அர்ப்பணிக்கும் பாப்பாத்தியம்மாள் சாமாவின் கண்ணோட்டம் போன்றவை போதியளவு விவரிக்கபடவில்லை. நாவல் முழுவதும் சோமு முதலியின் பார்வையிலேயே செல்வதால், மற்ற பாத்திரங்களின் ஆழத்தையும் சோமு வாயிலாகவே நாம் அறிய முடிகிறது.

ஏறக்குறைய எழுபது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருந்த போதிலும், வாழ்வின் மீதான பார்வையினால் காலத்தை வென்று தமிழின் மிகச் சிறந்த பத்து நாவல்களுள் ஒன்றாய் தன்னை நிறுவிக் கொண்டுள்ளது பொய்த் தேவு.


No comments:

Post a Comment

Write your valuable comments here friends..