Tuesday, January 26, 2016

தீண்டிச் செல்லும் விரல்கள்

தோக்கியோ தமிழர்களின் 25 வது ஆண்டு பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்காக ஜப்பானுக்கு வந்திறங்கிய உடன், இயக்குநர் மிஷ்கின், தான் பார்க்க விரும்பும் இடங்களின் பட்டியலை கொடுத்தார். எதிர்பார்த்தது போலவே இரண்டு விஷயங்கள். குராசவாவின் கல்லறை முதலிடத்தில் இருந்தது. வழக்கமாக வரும் விருந்தினர்கள் பார்க்கவிரும்பும் எந்த இடமும் அந்த பட்டியலில் இல்லை.

நேற்று மாலை (25-ஜனவரி) மூன்று மணி அளவில் தோக்கியோவிலிருந்து அகிரா குராசவாவின் கல்லறை அமைந்திருக்கும் காமகுராவை நோக்கி காரில் பயணித்தோம். காமகுரா இன்று கடலோரத்தில்  அமைந்திருக்கும் ஒரு அழகிய சிற்றூர். ஆனால் 1192ல் மினாமோத்தோ யோரிதோமோ (Minamoto Yoritomo) ஜப்பானை ஆண்டபோது காமகுராதான் தலைநகர்.

இங்கு குளிர்காலமாகையால், சீக்கிரமே இருட்டிவிடும். நாம் அங்கு செல்லும்போது வெளிச்சமிருக்குமா? என்று கேட்டபடியே இருந்தார் மிஷ்கின். அந்த பதட்டமும் பரவசமும் கலந்த உணர்வுநிலை எங்களையும் தொற்றிக் கொள்ள, கார் அதிவேகத்தில் விரைந்தது. காமகுராவை அடைந்தபோது மாலை சூரியனின் பொன்னொளி மலைகளில் ஒரு பக்கம் ஒளிர, ரம்மியமான சூழ்நிலையில், அகிரா குராசவாவின் கல்லறை அமைந்திருக்கும் அன்யோ இன் புத்த கோவிலை சென்றடைந்தோம். 
அன்யோ-இன் (An’yo-in) கோவில், புத்தமதத்தின் ஒரு பிரிவான ஜோடோ புத்தித்தை (Jodo – Shu) சார்ந்தது. ஜோடோ சூ பிரிவை தோற்றுவித்தவர் ஹோனென் (Honen, 1133 – 1212). தனது ஒன்பதாவது வயதில், துறவியான ஹோனென், அப்போதைய நடைமுறையில் இருந்து விலகி, பாலியல் தொழிலாளிகள், மீனவர்கள் என அனைவருக்குமானதாக புத்தமதத்தை ஆக்க முயன்றார். மாதவிலக்கு நாட்களிலும் பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க முயல, மன்னரால் தண்டிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார். அவரது சீடர்கள் சிலபேர் கொல்லப்பட்டனர். பிற்பாடு அவரது சீடர்களால் உருவாக்கப்பட்ட பிரிவுதான் ஜோடோ புத்திசம். ஒருவகையில் அயோ-இன் கோவிலுக்குள், குராசவாவின் கல்லறை அமைந்தது பொருத்தமானதுதான்.


கோவிலுக்குள் நுழைந்து ஒவ்வொரு கல்லறையாக பெயர்களை படித்தபடி குராசவாவின் கல்லறையை தேடினோம்.  வரிசையாக பல கல்லறைகள் மலையின் ஓரம் அமைந்திருக்க, ஒரு சிறு குன்றை நோக்கி படிக்கட்டுகள் மேலே சென்றன. குன்றின் மேலே ஏறி வலதுபக்கம் நடந்தால், இறுதியாக மலையை நோக்கியபடி உறங்குகிறார் உலக சினிமாவின் சாமுராய் குராசவா.

காஞ்சியை (Kanji) படித்து குராசவாவின் கல்லறை இதுதான் என்று சொல்வதற்காக எனக்கு பின்னால் வந்துக் கொண்டிருந்த மிஷ்கினை தேடினால், அவரை காணவில்லை. ஓடி சென்று தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து, கல்லறையை சுத்தம் செய்ய தொடங்கினார். உச்சக்கட்ட பரவசத்துடன் பெயர்பொறிக்கப்பட்டிருந்த கல்லில் தண்ணீரை ஊற்றி துடைத்தெடுத்தார். மலைகளின் மேல் படர்ந்திருந்த பூக்களை பறித்து வந்து வரிசையாக அடுக்கினார். இருகைகளையும் விரித்தபடி காற்றில் குராசவாவை அனைத்து கொண்டார். ஓ மை மாஸ்டர் என்று அவரது உதடுகள் உச்சரித்துக் கொண்டே இருந்தன. தனது ஆசிரியனை, உலக அன்பை எல்லாம் கொட்டி தனது தேவதையை நேசிக்கும் ஒரு காதலனை போல நேசிப்பதை பார்த்து நெகிழ்ந்துப் போய் நின்றேன்.

அவர் மனதை புரிந்துகொண்ட நண்பர் தியாககுறிஞ்சி, எங்கேயோ ஓடிசென்று, பூங்கொத்துகளுடன், ஒரு பாட்டில் ஷாக்கேயை கொண்டு வந்தார். அவற்றை தனது மூதாதையருக்கு படைக்கும் ஒரு பேரனைப் போல் பயபக்தியுடன் குராசாவின் காலடியில் வைத்தார். கண்களிலிருந்து நீர் வழிந்தபடி இருந்தது. என்னுடைய ஜப்பான் புனித யாத்திரை நிறைவடைந்தது என்றார். கல்லறையின் மேல் கவிழ்ந்து முத்தங்களை பொழிந்தார். திருக்காளத்தி காட்டில், கண்ணப்ப நாயனார், சிவனை எப்படி  வழிபட்டிருப்பார் என்பது காட்சிகளாக அந்த காமகுரா மலையோரம் வந்துபோனது.
ஏறக்குறைய அதே பித்தநிலைக்கு நானும் வந்திருந்தேன். வாழ்க்கை முழுவதும் பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் ஒரு தரிசனத்தை எனக்கு வழங்கியபடியே இருக்கும் காவியங்களை தந்த குராசாவா அங்கு நேரில் நிற்பதுபோன்ற சிலிர்ப்பு என் முதுகெலும்பில் ஊடுருவியது. கல்லறையை முத்தமிடுகையில் கதறி அழுதேன். ஐ அண்டர்ஸ்டான்ட் யூ செந்தில் என்ற மிஷ்கினை கட்டி தழுவிக் கொண்டேன். கொல்லன் தெருவில் ஊசி விற்கும் ஒரு பித்தனைப் போல, மிஷ்கினிடம் இகிருவிலிருந்தும், ரெட் பியர்டில் இருந்தும் காட்சிகளை சொல்லிக் கொண்டே இருந்தேன்.
லெட் அஸ் டிரிங்க் என்றார் மிஷ்கின். அங்கேயே ஷாக்கேயை திறந்து குராசாவின் காலடியில் அமர்ந்து குடித்தோம். செவன் சாமூராய் கிளைமேக்ஸ் மியூசிக் வேண்டும் செந்தில் என்றார். யூ டியூபிலிருந்து ஒலிக்கவிட்டேன். வாழ்வின் அற்புதமான ஒரு தருணம்..அந்த தருணத்தை நீட்டியபடியே அமர்ந்திருந்தோம். வாழ்க்கை என்பது, இதைபோல் ஒரு சில அற்புத தருணங்கள் அல்லாமல் வேறு என்ன?.


காமகுராவிற்கு ஒன்றாக வந்த நடிகர் அபிஷேக், நண்பர் தியாக குறிஞ்சி என அனைவரும் அந்த அற்புதத்தை அனுபவித்தனர். அந்த அனுபவத்தை நண்பர்களுக்கும் கடத்த விரும்பிய மிஷ்கின் அங்கிருந்தபடியே தொலைபேசியில் அழைத்தார். வெற்றிமாறன், எஸ்.வி.ராஜதுரை, ஷாஜி, ராகுலன், இயக்குனர் ராம் என அழைத்த அனைவரும் மறுமுனையில் நெகிழ்வதை உணர முடிந்தது. என்னுடைய வாத்தியாரை பார்க்க என்னவிட்டு நீங்கள் மட்டும் சென்று விட்டீர்களே, என்றார் வெற்றிமாறன்.


வெகுநேரமாகிவிட்டதால் பக்கத்தில் வசிக்கும் ஜப்பானியர் ஒருவர் என்ன நடக்கிறது என்று புரியாமல் மேலே வந்து பார்த்தார். எங்களை தொந்தரவு செய்யவிரும்பாமல் சிரித்தபடி கீழே சென்றுவிட்டார். நன்கு இருட்டிவிட்டதால் செல்லலாம் மிஷ்கின் என்றேன். தனது பர்சிலிருந்து இந்திய நாணயங்களை எடுத்து கல்லறையின் மேல் வைத்தார். தன்னுடைய பேக்கிலிருந்து ஒரு பேப்பரை உருவி, கல்லறையில் அமர்ந்து  குருவிற்கான தனது பிரமாணங்களை எழுதினார். செவன் சாமூராயின் தீம் மியூசிக் ஒலிக்க சாமுராய்க்களை போல ஒவ்வொருவராக கீழே இறங்கினோம்.

காரில் ஏறி கொஞ்சநேரம் யாரும் எதுவும் பேசவில்லை. இந்த நிலையிலிருந்து என்னை வெளியேகொண்டுவர எனக்கு ராஜா வேண்டுமே என்றார். “ஆனந்தராகம் கேட்கும் காலம்” ஒலிக்க தொடங்கியது. மெல்ல தோக்கியோவை நோக்கி கார் விரைய தொடங்க, கமாகுரா கடல் அலைகள் எங்களை நோக்கி வந்து, வந்து திரும்பிகொண்டிருந்தது.


ஶ்ரீபாலாஜி உணவக குழுமத்தின் உரிமையாளர், நண்பர் தியாககுறிஞ்சி. அந்த உணவகத்தில் சமையல் கலைஞராக பணிபுரிபவர் ஆரோக்கியராஜ் அண்ணன். எப்போது சாப்பிட சென்றாலும், சிறிய புன்னகையுடன் தலையசைத்துவிட்டு பணியில் முழுகிவிடுவார். மிஷ்கின் வந்திறங்கிய நாள் முதல் மனிதர், சிரித்துக் கொண்டே இருக்கிறார். நந்தலாலா படத்தில் பாஸ்கர்மணி சுவரை தடவியபடியேதான் நடப்பார். படம் முழுவதும் வெவ்வேறு மனிதர்களை, தொட்டுத்தடவி பூக்களாய் அவர்களை மலரவிட்டு பயணத்தைத் தொடர்வார். மிஷ்கினின் பயணம் தொடர்கிறது

12 comments:

 1. நாங்களும் உடன் நடந்தது போல ஒரு உணர்வு. பகிர்ந்ததற்கு நன்றி!

  ReplyDelete
 2. Nenjai thodum anubavam. Vaazhga.

  ReplyDelete
 3. Nenjai thodum anubavam. Vaazhga.

  ReplyDelete
 4. அழகான எழுத்து. நானும் கூடவே வந்ததுபோன்ற உணர்வைத் தந்தது உங்கள் குறிப்பு. நன்றி செந்தில்

  ReplyDelete
 5. Thanks for a moving and nice write up.

  ReplyDelete
 6. Thoroughly enjoyed the narration.

  ReplyDelete
 7. வாழ்த்துகள் நண்பா... அருமையாக வெளிபடுத்தியுள்ளாய்... தொடரட்டும் உன் கலைப் பணி ...

  ReplyDelete
 8. அற்புதம், நானும் அருகில் இருந்தார் போன்றதொரு உணர்வு. படங்களும், அதன் உணர்வுகளையும் எழுத்துக்களாய் கொண்டுவந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 9. மிஷ்கின் , அக்கிரோகுரசேவா இருவருடனும் இருக்கும் பாக்கியம் பெற்றோம். நன்றி புகைப்படங்களுடன் எங்களை அங்கு அழைத்து சென்றமைக்கு..!

  ReplyDelete
 10. தனது ஆசிரியனை, உலக அன்பை எல்லாம் கொட்டி தனது தேவதையை நேசிக்கும் ஒரு காதலனை போல நேசிப்பதை பார்த்து நானும் நெகிழ்ந்துதான் போனேன்.ஒரு ஆணுக்கு இன்னொரு ஆணின் மேல் இவ்வளவு காதலா?? மனம் கனத்த உணர்வு.

  ReplyDelete
 11. தனது ஆசிரியனை, உலக அன்பை எல்லாம் கொட்டி தனது தேவதையை நேசிக்கும் ஒரு காதலனை போல நேசிப்பதை பார்த்து நானும் நெகிழ்ந்துதான் போனேன்.ஒரு ஆணுக்கு இன்னொரு ஆணின் மேல் இவ்வளவு காதலா?? மனம் கனத்த உணர்வு.

  ReplyDelete
 12. ரொம்ப நல்ல இருந்தது இந்த பதிவு .

  ReplyDelete

Write your valuable comments here friends..