Monday, April 1, 2019

அழகிய கண்ணே.. உறவுகள் நீயே..


ஏறக்குறைய, இருபத்திஐந்து வருடங்களுக்கு முன் எங்கள் ஊர் சாந்தி திரையரங்கில் 'முள்ளும் மலரும்' படம் வந்திருந்தது. தீவிர ரஜினி ரசிகனான நான் அதுவரை பார்த்திராத பழைய படம். உடனடியாக, ஒரு இரவுக்காட்சிக்கு நானும் என் நண்பன் அருளும், அந்தப் படம், என்னை என்ன செய்ய போகிறது என்பது தெரியாது, ஒரு குதூகல மனநிலையில் உள்ளே சென்றோம்.ரஜினி ரசிகனாக உள்ளே சென்ற நான், மகேந்திரனின் பக்தனாக வெளியே வந்த நாள் அது. இவ்வளவு நேர்த்தியான பாத்திர படைப்புடன், கொஞ்சம் கூட செயற்க்கை தனமின்றி ஒரு திரைப்படம் சாத்தியமா என்று வியக்க வைத்த முள்ளும் மலரும் தான் இயக்குனராக மகேந்திரனின் முதல் திரைப்படம். அதன் பிறகு பார்க்ககிட்டிய அவருடைய அனைத்து படங்களையும், ஒன்று விடாமல் பார்த்து முடித்தேன்.

முள்ளும் மலரும் படத்தின் முதல் இரு காட்சியிலேயே, முழுபடமும் கையாளபோகிற கதையின் கருவை ஒரு அழகிய கவிதை போல் எழுதியிருப்பார், இயக்குனர் மகேந்திரன். முதல் காட்சியில், காளி தனது தங்கையின் மீது வைத்துள்ள பாசமும், இருவரின் ஆதரவு அற்ற நிலையும் விளங்கி விடும். இரண்டாவது காட்சியில்,கைநோக சுமை தூக்கி வரும் ஒரு முதிய தொழிலாளி, தவறுதலாக காரில் உரசிவிட,
அதையே சாக்காக காட்டி கூலி தர மறுத்து திட்டி அனுப்புவார் ஒரு பணக்காரர். அதை பார்த்துக்கொண்டிருக்கும் ரஜினி ஸ்டைலாக ஒரு கல்லை தனது காலால் கவ்வி எடுத்து, அந்த காரின் விளக்கை உடைப்பார். காளி பாத்திரத்தின் அலட்சியம், எதற்கும் அஞ்சாது, தனக்கு சரி என்று பட்டதை செய்யும் குணம், கோபம், எல்லாமும் அந்த ஒரு காட்சியில் வெளிப்பட்டுவிடும். அதே சமயத்தில், தனது காரில் ஏறி போவதற்காக வரும் சரத்பாபு, ரஜினி உடைத்த விளக்கின் ஒலி கேட்டு, தலை நிமிர்ந்து பார்ப்பார். எதற்காக ரஜினி செய்தார் என்பதெல்லாம் சரத்பாபுவுக்கு தெரியாது. அவர் பார்த்ததெல்லாம், ஒரு ரவுடி போன்ற காளியின் செய்கையையே. இரு பாத்திரத்திற்கும் படம் முழுவதும் விரிய போகும் விரிசல் இந்த காட்சியிலேயே விழுந்துவிடும்.



பூட்டாத பூட்டுக்கள் போன்ற ஒரு கதையை எடுக்கவேண்டும் என்று மனித உறவுகளை நேசிக்கும், மனித உணர்வுகளை ஆராதிக்கும் ஒரு கலைஞனுக்கே தோன்றும்.  முள்ளும் மலரும், உதிரிபூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, ஜானி, மெட்டி இவை தமிழ்சினிமா பெருமைப்பட்டுக்கொள்ள மகேந்திரன் தந்த முத்துக்கள்.

மூன்று முறை சந்தித்திருக்கிறேன். சில மணிநேரங்கள் உரையாடியிருக்கிறேன். கொஞ்சமும் அதிராமல், அழகான உடல்மொழியுடன் அவர் பேசும் அந்த கணங்கள் இன்றும் நினைவில் ஒளிர்கிறது. கொஞ்சம் வற்புறுத்தினால் விஷத்தைகூட சாப்பிடவைத்துவிடலாமென்கிற அந்த மென்மையே, ஜானி படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு கூட்டம் ஏற்பாடு செய்யாமல், இருப்பதை வைத்து எடுத்துகொள் என்று தயாரிப்பாளர் சொல்லும்போது, மறுபேச்சின்றி எடுக்க வைத்தது. ஒவ்வொருமுறையும், எவ்வளவு வற்புறுத்தியும் கேட்காமல் கார் கதவு வரை வந்து வழியனுப்பும் அந்த அன்பை என் வாழ்நாள் முழுவதும்  நெஞ்சில் சுமப்பேன்.

தனது பெயர்பலகையை ஜப்பானிய மொழியில் எழுதி மாட்டிவைத்திருக்கும் அளவுக்கு ஜப்பானின் காதலர். எப்படியாவது ஒரு முறை தோக்கியோ அழைத்துவந்து விடமென்று முயற்சித்து, ஒரு முறை எல்லாம் தயாராகிவிட்ட சூழலில், அவர் நடிகராகிவிட, சூட்டிங் காரணமாக வர இயலாத படி போனது, ஒரு குறையாக உறுத்துகிறது.  

அழைக்கும்போதெல்லாம், ”அழகிய கண்ணே” என்று பாடும் அவரது தொலைபேசி மெளனமாகிவிட்டதை மனம் நம்பமறுக்கிறது.

1 comment:

  1. அருமையான நெகிழ்ச்சியான பதிவு செந்தில் san. உதிர்ந்த பூக்கள் மாலையானது என்றும் நம் நெஞ்சில்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Write your valuable comments here friends..