இறைவி
வந்தபோது, அந்த படத்தைப் பற்றிய என்னுடைய
பார்வையைத் தளத்தில் எழுதியிருந்தேன்.
ஆம்பளைத்தனம் என்று ஒன்று உண்டு. பெண்களை சற்று
குறைவாக கருதுகிற, பெண்களிடம்
இதை எல்லாம் என்ன போய் சொல்லிக்கொண்டு என்று நினைக்கிற, இன்னும்
சொல்ல போனால் , சக ஆண்களை விட கூட நான் சற்று
மேம்பட்டவன் என்று எப்போதும் காட்டிக்கொண்டேயிருக்கிற
குணாம்சம் அது. காட்டு வாழ்க்கையில் இருந்து வந்த
பூர்வஜென்ம வாசனை அது. நாகரீகமாக
தன்னை காட்டிக்கொள்ள எவ்வளவு கவனமாக இதை மறைத்தாலும், எந்த
ஆணிடம் இது இன்னும் மீதமிருக்கிறது என்பதை ஒரு பெண் உள்ளூர உணர்வாள்.
இந்த ஆம்பளைத்தனத்தை கேள்விக்குள்ளாக்கும்
கார்த்திக் சுப்புராஜின் முதல் முயற்சியாக இறைவி இருந்தாள். இன்னும் நெடுங்காலம்
நிற்கக்கூடிய அழகான படைப்பாக இன்று டோரதி வந்திருக்கிறாள்.
கார்த்திக், டோரதியின்
மூலம் , ஆம்பளைத்தனத்தோடு சேர்த்து இன்னும்
பல விஷயங்களை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார். சாதிய
திமிர், ஆணவ கொலைகள்,
திருநங்கைகளின் மீதான சமூக விலக்கம் இப்படி பல
உயர் அழுத்த மின்சார கம்பிகளின் மீது பயணித்தாலும் எந்த இடத்திலும் இது பிரச்சாரம்
ஆகாமல், அந்த கம்பிகளின் மீது காதலைக் கொண்டு
அவரால் சிட்டுக்குருவிகளின் அழகிய கூடு ஒன்றை கட்ட முடிந்திருக்கிறது.
ஆணாதிக்கமும் வன்முறையும் நிறைந்த, பெண்களே தங்காத அந்த வீட்டில் ஒரு தேவதை போல்
டோரதி வருவதும், சுப்பு, அவள் மூலம்
தன்னை வெளிக்கொண்டு வருவதும் மழைக்கால இரவுகளின் குளிர் போல் இதமளிக்கும் இடங்கள்.
சட்டென்று அவள் மறைவதும், அந்தரத்தில்
தொங்கும் அந்த கால்களும் ஒரு அழகிய கனவிலிருந்து சட்டென்று உலுக்கி வெளிக்கொண்டு
வரும் அதிர்ச்சியை தருகிறது.
ஆண்டாண்டு காலமாக புரையோடி போயிருக்கும் ஆணாதிக்கம், மற்றும் போலி கெளரவத்தின் மீது சுப்பு காறி உமிழ எண்ணுகிறாள். அதன் பாதை தான் பகுசரா மாதாவின் திருவிழா நோக்கிய பயணம். தமிழ் நாட்டில் நடக்கும் கூவாகம் கூத்தாண்டவர் விழாவில் ஒரு சரணடைதல் இருக்கிறது. போருக்கு செல்லும் அரவான் திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறான். பெண்கள் யாரும் தயாராக இல்லாததால் கிருஷ்ணர் மோகினியாக மாறி திருமணம் செய்துக்கொள்கிறார். போரில் தற்கொடையாக மாறும் அரவானை எண்ணி திருநங்கையர்கள் கூடி அவனிடம் தாலிக்கட்டிக்கொண்டு உடனே விதவையாகி நிற்கும் ஒரு அவல சடங்கு அது.
பகுசரா மாதா, தன்னுடைய
மார்பகத்தை அரிந்து, கொள்ளையடிக்க
வந்தவன் மீதெறிந்து ஏழேழு ஜென்மத்திற்க்கும் அவன் ஆண்மையில்லாதவனாக சாபமிட்டவள். அது ஒரு எழுச்சியின் குறியீடு. சுப்பு செய்ய
நினைப்பதும் அதுவே. அவள் வெட்டியெறிய இருப்பது அவளது குடும்பத்தின் மீது. பகுசரா மாதாவின் வாகனம் சேவல். சுப்பு, எப்போதும் தன்னுடன் அடை காத்து வைத்திருக்கும்
சேவலை, விசில் வீரய்யா பெட்டையாகி விட்டது
என்று கழுத்தை திருகி எறிகிறார்.
வசனங்கள் பல இடங்களில் கூர்மையாக இலக்கை தைக்கிறது. திரைகதை அமைப்பில் எழுத்தாளர் சரவண சந்திரன் உதவியிருக்கிறார். வாழ்த்துகள் !
ரிஷிகாந்த், இயல்பான
நடிப்பால் பல இடங்களில் முள்ளும் மலரும் காளியை நினைவுப்படுத்துகிறார். சன்னத் மிக கனமான பாத்திரத்தை அற்புதமாக
தாங்கியிருக்கிறார். விசில் வீரய்யா, சண்டைக்கோழி
மகன்கள், ராம் என பலரும் அழகாக அந்த
பாத்திரங்களில் பொருந்தியிருக்கிறார்கள்.
அபாரமான இசையால், ராஜா ஒவ்வொரு காட்சியையும் மெருகேற்றுகிறார். பாடல்கள் வரும் இடங்கள், கவனமான தேர்வு.
சுப்பு, நிர்வாணமடையும் அந்த இடத்தில், ராஜாவின் குரல்
“மின்னும் பொன்னும், வைர கீரிடம், சிரசில் தகதகவென ஜொலிக்கும்,
மாதங்கி, மரகதமணி மீனாட்சி, நீதாண்டி .. மீனாட்சி நீதாண்டி”
என்று ஒலிக்கையில், சிலிர்க்கிறது.
டோரதி என்றால் கடவுளின் பரிசு என்று பொருள்.
தமிழ் சினிமாவிற்கு, கார்த்திக்
சுப்புராஜின் பரிசு இந்த டோரதி. கார்த்திக் சுப்புராஜின் கைகளில், மானசீகமாக முத்தமிடுகிறேன்.


No comments:
Post a Comment
Write your valuable comments here friends..