Monday, March 2, 2020

செர்ரி ஃப்ளாசம்




வினோத் அலுவலகத்துக்கு செல்வதற்க்காக, காரை இயக்கி வெளியே வந்த பின் கேரேஜின் கதவை ரிமோட்டில் மூடினான். அந்த கதவு இயங்கும் ஒலி கேட்டபின் அந்த நாளின் பரபரப்பு ஓய்ந்து அமைதியடைந்தாள் சம்யுக்தா. கொதித்துக்கொண்டிருந்த நீர் எடுத்து தேனீர் கலந்துக்கொண்டு தொலைகாட்சியை இயக்கியபடி ஷோபாவில் அமர்ந்தாள்.  தொலைகாட்சியில் அந்த ஜப்பானிய பெண் கேரட்டை கழுவி எடுத்து நேர் வாக்கில் கோடுகிழித்தாற்போல் வகிர்ந்தெடுத்தாள். பிறகு வகிர்ந்த மூன்று துண்டுகளையும் குறுக்குவாட்டில் வட்டவட்டமாக நறுக்கினாள். இன்னும் கொஞ்சம் அழுத்தி பிடித்தால், வலிக்கும் என்பது போன்ற பாவனை. அவ்வளவு கூர்மையான கத்தி இங்கில்லை.  அந்த கத்தியில் ஏன், நேர்வாக்கில் ஓட்டைகள் என்று தெரியவில்லை. பிறகு அதேபோல் முள்ளங்கியை வெட்டினாள். பிறகு எல்லாவற்றையும் அந்த அரைத்த மீன் கொதிக்கும் சூப்பில் போட்டு கலக்கினாள். முகத்திலிருந்த புன்னகை மட்டும் மாறவில்லை.

ஏறக்குறைய திருமணமாகி வந்த இரண்டு ஆண்டுகளில் தினமும் இந்த சேனலை பார்க்கிறாள், சம்யுக்தா. ஜப்பானிய மொழி புரியாமல். இந்த சேனலை பார்ப்பது கண்டு வினோத் முதலில் கிண்டல் செய்தான். அதை பற்றியெல்லாம் கவலையின்றி, ஜப்பானிய தொலைக்காட்சியில் ஒருபோதும் தான் சமைக்கபோகாத சமையலை தொடர்ந்து பார்த்தாள் சம்யுக்தா. இந்த சேனல் பார்க்கதொடங்கியவுடன் மனம் ஓய்வடைவதாய், இந்த உலகம் இன்னும் நிதானமாக சுழல்வதாய் உணர்வாள். சமையல் நிகழ்ச்சி இல்லாத நேரங்களில், ஒரிகாமி என்னும் பேப்பர் கட்டிங் கலை, உரையாடல் நிகழ்ச்சி, நாடகங்கள் என தொடர்ந்து பார்த்தாள். சமையல் நிகழ்ச்சி முடிந்ததும், நோ நாடகம் ஒளிபரப்பானது. ஆங்கிலத்தில் சப்டைட்டில் வந்தது. முன்பொரு காலத்தில் வயதான பிறகு, கூடையில் வைத்து சுமந்து வந்து மிருகங்கள் உலவும் அந்த மலையில் தனியே விட்டுப்போன மகனை நினைத்து அழும் கிழவியை  நிதானமாக நடித்து காட்டினாள் நோ நடிகை.

கலிபோர்னியா வருவதற்க்கு முன், சென்னையில் படிக்கும்போது தனக்கிருந்தது போல் வினோத்துக்கும் சில கனவுகள் இருந்திருக்ககூடும் என்று நினைத்துக்கொண்டாள் தன்னைபோலவே அவனுக்கும் அவை பொய்த்திருக்கவும் கூடும்.  உள்ளுக்குள் புன்னகை தோன்றியது. உலகம் முழுவதும் பார்க்கவேண்டிய இடங்கள் என்று ஒரு பட்டியல் இருந்தது. அதில் முதலாவதாக சாமுராய்களின் தேசமிருந்தது. ஜப்பான் மீதான காதல் கல்லூரி காலங்களிலேயே தோன்றிவிட்டது. கிமானோ உடையும், மலை ஓரத்தில் பூத்திருக்கும் சகுரா மலராகவும் அந்த நாடு மனதில் எப்படியோ தங்கி விட்டது. வருடம் முழுவதும் காத்திருந்து, ஏப்ரல் மாதத்தில் சட்டென்று மரத்திலிருந்தே மலர்ந்து, மூன்று நாட்களில் கொட்டிபோகிற சகுரா மலர்களிடையே அவள் கனவுகளில் உலாவந்தாள். அமெரிக்கா பற்றி எந்த பெரிய பிம்பமும் இல்லை. ஆனால் அவள் பார்த்த முதல் அயல்நாடே அமெரிக்கா தான்.

முதலில் வினோத்துக்கும், தனக்கும் பொருந்திய ஜாதகம் குறித்து அம்மாதான் சொன்னாள். இதுபோல் பத்து பொருத்தமும் பொருந்திவருபவை லட்சத்தில் ஒன்றே என்று வடுவூர் ஜோசியர் சொன்னதாக அடிக்கடி கூறினாள். பைபாஸ் சர்ஜரி செய்த தந்தை, தனக்கு கீழிருக்கும் தங்கை, இவர்களுடன் திருமணம் இப்போதுவேண்டாம் என்று கூறக்கூட வாய்ப்பில்லை. முதலில் தோழிகளின் அமெரிக்க கனவு, கீரின் கார்டு கணவன், புது இடம் போகும் பயணம் இவையெல்லாம், மயக்கத்தையே தந்தது. பிறகு சில நாட்களில் சான் ஒஸேவின் தனிமை வாட்டத்தொடங்கியது. வினோத் அலுவலகம் போனபின் செய்வதற்கு ஏதுமில்லாது ஒரு மணி நேரத்திற்க்கு ஒரு முறை அம்மாவிடமும், சாலுவிடம் பேசினாள். பிறகு கொஞ்சம், கொஞ்சமாக சொல்வதற்கேதுமில்லாது போனது. அந்த நேரங்களில் தான் இப்படி ஜப்பானிய தொலைகாட்சி பார்க்கும் வழக்கம் தொற்றிக்கொண்டது. வினோத் அலுவலகத்திலேயே மதிய உணவு சாப்பிட்டுவிடுவதால், தனக்கும் மட்டுமான உணவை தயார் செய்தாள். மதிய பொழுது நீண்டுக்கொண்டே இருப்பதுபோல் தோன்றியது. எழுந்து தோட்டத்திற்க்கான கையுறைகள் அணிந்து செடிகளுக்கு நீர் ஊற்றினாள். வெளியே செல்லும் கார்களை சற்று நேரம் வேடிக்கை பார்த்தாள்.

மூன்று மணியடித்தபோது, வினோத் அழைத்தான்.

என்ன செய்றே சமி?

செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினேன். இன்னைக்கும் வர லேட்டாகுமா வினு?

நோ. நோ.. இன்னைக்கு சீக்கிரம் வந்துடுறேன். நான் போன் செஞ்சது அதுக்கில்லை. இந்த முறை இந்தியாபோகும்போது உனக்கொரு சர்ப்ரைஸ் இருக்கு. அதை சொல்லதான் கால் செஞ்சேன்.

ஏய், என்னன்னு சொல்லு ப்ளிஸ்..

அதை இப்பவே சொன்னா அது எப்படி சர்ப்ரைஸ் ஆகும்? வீடு வரும் வரை காத்திரு பேபி. பை.ஸ்விட்டி.

என்ன ஆச்சரியம் இருக்கும்? யோசித்தாள் சம்யுக்தா. வாழ்க்கை நன்றாக தான் இருக்கிறது. வினோத் நிச்சயமாய் நன்றாக வைத்துக்கொள்கிறான். மகிழ்ச்சியாகவே நாட்கள் செல்கின்றன இருப்பினும்சொல்ல முடியாத ஒரு வெறுமையை நாளுக்கு நாள் உணர்வது ஏன்?. அதை வெளிப்படுத்தாது கவனமாக இருக்கையில் இன்னும் அதிகமாக அது வெளிப்பட்டு விடுகிறது. வினோத் நல்லவன். கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து மிக கவனமாக உழைத்து இந்த இடத்துக்கு வந்தவன். சிறு வயதிலேயே இந்திய சாஸ்திரிய சங்கீதம் படித்தவன். ஆனால் என்ன காரணத்தினாலோ அவன் அதை தொடரவில்லை நண்பர்கள் சந்திப்பில் அழகாக பாடுவான். அவ்வபோது அவனிடம் அடிக்கும் ஆல்ஹாலின் வாசத்தை தவிர்த்துவிட்டால் எந்த பிரச்சினையும் இல்லாத அன்பான கணவன் தான்.

இரவு ஏழு மணி போல் வினோத் வந்தான். அவனாக சொல்வான் என்று பார்த்தால் அவன் வேண்டுமென்றே மறந்துவிட்டது போல் நடித்தான்.

வினு நீயாக சொல்லவில்லையென்றால் நான் போய் தூங்கபோகிறேன். சொல் அது என்ன சர்ப்ரைஸ்?

ஏய். கோச்சுக்காதே. இந்த முறை இந்தியாபோகும்போது, ஸ்டாப் ஓவர் எது தெரியுமா? உன்னுடைய கனவு பூமி டோக்கியோ தான். அங்கே மூன்று நாள் இருக்க போறோம்.

சம்யுக்தாவுக்கு, ஜப்பான் பற்றிய நினைவே மகிழ்ச்சியைத் தந்தது. அடுத்து வந்த மூன்று மாதங்களும் டோக்கியோவில் பார்க்கவேண்டிய இடங்கள், ஜென் கார்டன்கள் என பட்டியலிடுவதிலேயே போனது. வினோத், டோக்கியோவில் வசிக்கும் தனது நண்பர் சுனிலிடம் பேசி தங்கும் விடுதி ஏற்பாடு செய்துக்கொண்டான்.

டிசம்பர் 28 கிளம்பி, டோக்கியோ சென்று அங்கு மூன்று நாட்கள் தங்கி புதுவருடத்தை அங்கேயே கழித்துவிட்டு பிறகு சென்னை செல்வது என்று திட்டம். அந்த நாளும் வந்தது. சான் ப்ரான்ஸிக்கோ விமான நிலையத்திலேயே பரபரப்படைந்தாள் சம்யுக்தா. விமானத்தின் உள்ளே ஜப்பானிய பெண்கள் அழகான புன்னகையுடன் உணவு பரிமாறினார்கள். அந்த புன்னகையில் போலித்தனமில்லை என்று தோன்றியது. பத்து மணி நேர பயணத்தில் டிசம்பர் 29 காலை நரித்தா விமான நிலையத்தில் தரையிறங்கியது.

விமான நிலையத்திலும், குடிபுகல் வரிசை அவ்வளவு பெரிதாக இல்லை. எல்லாம் முடிந்து விடுதிக்கு வந்தனர். குளியல் முடிந்து அருகிலிருந்த ஜப்பானிய உணவகத்தில் இருவரும் சுடசுட ராமென் சாப்பிட்டனர் விமானத்திலேயே தூங்கிவிட்டதால், முதல் நாளே சுற்ற கிளம்பினார்கள்.  சம்யுக்தாவிற்கு டோக்கியோ பழகிய ஊராகவே தோன்றியது. தொடர்ந்து பார்த்திருந்த தொலைகாட்சி நிகழ்ச்சிகளால், உணவு வகைகள் எல்லாம் அத்துபடியாக இருந்தது. கடைகளில், தெருக்களில் என எங்கும் மக்கள் கூட்டமிருந்தது. அனைவரும் தங்களை அன்புடன் பார்ப்பதாக எண்ணிக்கொண்டாள் சம்யுக்தா.

டோக்கியோ அரண்மனைக்கு சென்றனர். பெரிய கோட்டைக்குள் இருவரும் சுற்றினர். கோட்டையில் கொத்தளம் போல் அமைந்திருந்த தளத்தில் ஏறி, இடுப்பிலிருந்து இல்லாத வாள் உருவி ஜப்பானிய இளவரசி என்று சிரித்தாள் சம்யுக்தா. நான் உன்னை கவர்ந்துபோக வந்திருக்கும் சாமுராய் என்று வாள் வீசினான் வினோத். இருவரையும் தவிர அங்கிருந்த சீன பயணிகள் தமக்குள் ஏதோ பேசி சிரித்தனர்.

மதிய உணவுக்கு வினோத்தின் நண்பர் சுனிலை சந்தித்தனர். சுனில் வினோத்தை விட மூத்தவராக தோன்றினார். வெகு நாட்கள் ஜப்பானில் வசித்ததால், ஜப்பானியர் போலவே குனிந்து வரவேற்றார். சுனிலின் மனைவி ஐஸ்வர்யா, இயல்பாக பழகினார். சான் ஒஸேவிலிருந்து வாங்கிவந்த திண்பண்டங்களை வழங்கினாள் சம்யுக்தா. பிறகு அவர்களிடம் விடைப்பெற்று அசாகுசா சிண்டோ கோவிலுக்கு சென்றார்கள் கோவிலின் வெளியே இருந்த பெரிய மணியை இருவரும் அடித்தனர். கோவிலுக்கு வெளியே ஊதுபத்தி கொளுத்தி வழிப்பட்டனர். அங்கிருந்து விடுதிக்கு இரவு திரும்பியவுடன், வயிற்றில் லேசாக வலி இருக்கிறது என்றான் வினோத்.

உனக்கு காரமான ராமென் ஒத்துக்கலையோ. கோலா வாங்கிவரவா?

சரி, காசு எடுத்துட்டு போ கீழே வெண்டிங் மெசின் இருக்கு

கோலா வாங்கிக்கொண்டு விடுதியறையை திறந்தபோது வினோத் குப்புற கவிழ்ந்து சுருண்டிருந்தான்.

வினு என்னாச்சு.

ரொம்ப வலிக்குதுடா

நாம எதுக்கும் டாக்டர்கிட்டே போயிடலாம் வினு. இரு, சுனில் அண்ணாவுக்கு போன் செய்றேன்.

கொஞ்ச நேரத்தில் சுனில் வந்தார். டாக்ஸியில் ஏறும்போது வினோத் புன்னகைத்தான். ஏதோ ஃபுட் ஒத்துக்கலைன்னு நெனைக்குறேன் என்றான்.

மருத்துவமனையில் நுழையும்போது வலி அதிகமாகி இருந்தது. கண்ணீல் நீர் வழிந்தது. உள்ளே நுழைந்து சுனில் ஜப்பானிய மொழியில் வரவேற்பு மேஜையில் இருந்த பெண்ணிடம் ஏதோ சொல்லவும் அவள் கொடுத்த மூன்று தாள்களுடன் வந்தார். முதலில் நேரடியான கேள்விகள், எப்போதிலிருந்து வலி, எங்கு வலி போன்ற விவரங்கள். ஆல்கஹால் வாரத்துக்கு எத்தனை முறை என்ற கேள்விக்கு மூன்று என்பதை சம்யுக்தாவே டிக் செய்தாள்.

முன்பு இப்படி ஆகி இருக்கிறதா என்ற கேள்விக்கு, சம்யுக்தா இல்லையென்றும் வினு ஆமாம் என்றும் சொன்னான். இரண்டு வருடம் முன்பு அலுவலகத்தில் இப்படி வலி வந்து மருத்துவமனைக்குசென்று மாத்திரையில் சரியானது என்றான். சமி, நீ பயப்படுவேன்னு சொல்லலை டா என்றான்.

தகவல் எல்லாம் பதிந்துகொடுத்து ஒரு மணி நேரமாகியும் மருத்துவர் அழைக்கவில்லை. வினோத் இப்போது முன் இருக்கையில் தலையை சாய்த்து சுருண்டிருந்தான்.

அண்ணா, கொஞ்சம் கேளுங்களேன். இவருக்கு ரொம்ப வலிக்குது போல

சுனில் திரும்பவும் எழுந்து அதே பெண்ணிடம் வினோத்தை காட்டி தயவு செய்து உடனே ஏதேனும் செய்யமுடியுமா என்று கேட்டார். அவள் எழுந்து ஒரு முறை வினோத்தை பார்த்தாள். பிறகு போன் செய்து யாரிடமோ பேசினாள். பிறகு உள்ளே செல்ல சொன்னாள்.

வினோத்தை இருவரும் இருபக்கமும் தாங்கி உள்ளே சென்றால், அங்கு திரும்பவும் ஒரு கூட்டம் காத்திருந்ததை கண்டு திக்கென்றது. நல்லவேளையாக, சிறிது நேரத்தில் நியான் போர்டில் வினோத் பெயரும் உள்ளே செல்லவேண்டிய அறை எண்ணும் வந்தது. அந்த மருத்துவர், சிறிய பையனாக தெரிந்தார். சுனில் அண்ணா, விளக்கினார். வரிசை மீறி உள்ளே வந்தது, குறித்து கொஞ்சம் எரிச்சல்பட்டது போல் தெரிந்தார். அங்கிருந்த படுக்கையில் படுக்கவைத்து கையால் அமுக்கி பார்த்தார். ஒரு இடத்தில் கையை வைத்தவுடன் அலறினான் வினோத்.

அந்த மருத்துவரின் முகம் சீரியஸ் ஆனதுபோல் இருந்தது. சுனிலிடம் திரும்பி ஏதோ சொன்னார். பிறகு தனது மேஜைக்கு வந்து யாருக்கோ போன் செய்தார். தன்னுடைய சீனியருக்கு பேசுகிறார் என்றார் சுனில். எங்களை வெளியே காத்திருக்க சொன்னார்.

ஒரு அரை மணி நேரத்தில் திரும்பவும் சுனிலை உள்ளே கூப்பிட்டார்கள். சிலைன் போடவேண்டும் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டும் என்றார்கள். பயம் வந்தது. வெளியே வந்து அம்மாவுக்கு போன் செய்தேன். ஒன்னும் இருக்காதடி. கவலை படாதே.. வீக்கா இருக்குறதால சிலைன் போட சொல்லிருக்கலாம். காலைலே சரியாகிடும் என்றார்கள். எனக்கும் அப்படிதான் தோன்றியது. இரவு மணி 11 தாண்டி விட்டபின் வினோத்தை வார்டுக்குள் கொண்டு சென்றார்கள். சிலைன் ஓடிக்கொண்டிருந்தது.

இப்போ பரவாயில்லை டா என்றான் வினோத்.

அண்ணா, இங்கே நான் இருக்கேன். நீங்க வீட்டுக்கு கிளம்புங்க என்றாள்  சுனிலிடம்.

இல்லைமா, நான் இருக்கேன் அவன் கூட நீ போய் விடுதியில் ரெஸ்ட் எடு

மருத்துவமனையில் கேட்டபோது யாருக்கும் தங்க அனுமதி கிடையாது என்றார்கள். சுனில், சம்யுக்தாவை விடுதியில் விட்டு, வீட்டுக்கு கிளம்பிய போது மணி ஒன்றை தாண்டியிருந்து.

சம்யுக்தாவிற்கு தூக்கமில்லை. பேசாமல் இந்தியா நேரடியாக சென்றிருந்தால், அங்கே அனைவரும் இருந்திருப்பார்கள். சமாளித்திருக்கலாம். இங்கே வந்தது  தவறோ? என்று தோன்றியது வினுவுக்கு முன்பு வயிற்றுவலி வந்தது குறித்து எதுவும் சொல்லவில்லையே. கடைசியாக அவன் வருடாந்திர செக்கப் சென்றது எப்போது? போன வருடம் நிச்சயமில்லை. அதற்கு முந்தைய வருடம். பரிசோதனை முடிந்து வந்து, சில நாட்கள் மாத்திரை தின்றான். கொழுப்பு கரைய, இது எல்லாம் இந்தியாவில் பெரிய அளவில்லை ஆனால், அமெரிக்காவில் இதற்கே மாத்திரை கொடுத்துவிடுவார்க்ள் என்றான். தண்ணியடிக்க போவதில்லை என்று நிறுத்தியிருந்தான். சில நாட்களிலேயே ஆபிஸ் பார்ட்டி என்று தள்ளாடி வந்தான். இதை நிறுத்தவே முடியாதா உன்னால என்று கடுமையாக சண்டை போட்டது அன்று தான். அட, இது ஒரு சின்ன ரிலாக்ஸ்சேசன்தான். ஏன் அதற்க்கு அலட்டிகொள்கிறாய் என்றான் அடுத்த நாள்.

தூக்கம் கண்ணை அசத்தியபோது, மொபைல் அடித்தது. மணி என்ன? ஐந்தரை. சுனில் அண்ணாதான்.

சம்யுக்தா, மருத்துவமனையிலிருந்து போன் வந்துச்சு. உடனே புறப்பட்டு மருத்துவமனை வந்துடு. நான் இப்போ அங்கேதான் வந்துட்டு இருக்கேன்

அண்ணா, என்னாச்சுண்ணா ? பயம் தொண்டையை அடைத்தது

பயப்ப்ட ஒண்ணுமில்லை. நீ உடனே வந்துடும்மா.

எனக்கு டாக்ஸி பிடிக்கணுமே

நான் விடுதி வரவேற்பரையில் பேசிவிட்டேன் அவங்களே ஏற்பாடு செய்வாங்க.

டாக்ஸியில் மருத்துவமனை சென்றபோது நேற்றிருந்த அந்த இளைஞனுடன் வேறு சில மருத்துவர்களும் இருந்தனர். அதில் ஒருவர் மீசை கோடுபோல் வைத்திருந்தார். தலைமுடி மிக அடர்த்தியாக முழுவதும் வெள்ளையாக நரைத்திருந்தது. அவர்தான் சீனியர் யமாகுச்சி என்றார் சுனில்

கணையம் வீங்கி செயல் இழந்திருக்கிறது அதனாலேயே வலிவந்திருக்கிறது. இப்போது கிரிட்டிகல் கேரில் இருக்கிறார் என்றார்கள்.

வினுவை பார்க்கவேண்டும் என்றதற்க்கு ஒரு கண்ணாடியின் முன்புகொண்டு நிறுத்தினார்கள்.

முகமெங்கும் குழாய் பொருத்தப்பட்டிருந்தது. கருவிகள் பச்சை நிறத்திலும், நீல நிறத்திலும் மேலும் கீழுமாக வரிகளை வரைந்துக்கொண்டிருந்தது. வினு என்று முணுமுணுத்தாள் சம்யுக்தா.

சுனில், ஓன்னும் பயப்படாதே. இங்குள்ள மருத்துவர்கள் மிகதிறமையானவர்கள். அவர்கள் சரிசெய்துவிடுவார்கள் என்றார்.

அவரே தொலைபேசி எண்கள் பெற்று வினோத்தின் வீட்டுக்கு பேசினார். சம்யுக்தாவின் வீட்டுக்கும் சொன்னார். சில நாட்கள் மருத்துவமனையில் இருக்கவேண்டியிருக்கும் அதனால், டிக்கெட்டை தள்ளி போட்டுவிடலாம் என்றார்.

டிசம்பர் 30ம்தேதி பணம் கட்டசொன்னார்கள். கையிலிருந்த கடன் அட்டையில் செலுத்தினாள். மாலை, திரும்பவும் யமாகுச்சியை பார்க்க போனாள். இப்போது கணையத்துடன், கல்லீரலும் செயல் இழந்துவிட்டது என்றார்.

எப்படி, இப்படி திடீர்ன்னு ஆகும் டாக்டர் ?

இல்லை இது திடீர்ன்னு ஆகலை. அவர் தொடர்ந்து ஆல்காஹால் அளவை தாண்டி எடுத்து இருக்கிறார். நிச்சயம் முன்பே அவருக்கு இந்த கணையம் பற்றி சொல்லப்பட்டிருக்கும் என்று சுனிலிடம் சொன்னார் யமாகுச்சி

மூன்று நாட்களில் என்ன சொன்னாலும் கேட்கும் நிலைக்கு வந்துவிட்டாள் சம்யுக்தா. டிசம்பர் 29 மதியம் சாமுராய் என்று வாள் உருவி சண்டைபோட்டவன், இரவு வரை நன்றாக பேசிக்கொண்டிருந்தவன் அதற்கு பிறகு கோமாவுக்கு சென்றுவிட்டதாக சொன்னார்கள். ஆனால், தங்களால் இயன்றதை செய்கிறோம். இது ரொம்பவும் சீரியஸ் கண்டிஷன் என்றார்கள்.

ஜனவரி ஒன்றாம் தேதி காலை, அறை கதவு தட்டப்பட்டது. சுனில் அவரது மனைவி ஐஸ்வர்யா மற்றும் நண்பர்கள் சிலர் நின்றிருந்தனர். ஐஸ்வர்யா கதவை திறந்தவுடன், ஓவென்று அழுது கட்டிபிடித்தார். சுனில் மனசை தேத்திக்கம்மா. வினோத் நம்மைவிட்டு போயிட்டான் என்றார்.

வினோத்தை பார்க்கணும் என்றாள் சம்யுக்தா. கண்ணில் சொட்டு கண்ணீர் வரவில்லை.

கண்ணாடி அறையிருந்து வேறோரு அறைக்குக்கொண்டு சென்றிருந்தார்கள். யமாகுச்சி சம்யுக்தாவிடம் வந்து கைகளை பிடித்து எங்களால் இயன்றதை செய்தோம். ஆனால் உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்துவிட்டது. மன்னித்துவிடுங்கள் என்றார்.

வினுவின் முகம் பலூன்போல் உப்பியிருந்தது. கைகளால் தடவினாள் சம்யுக்தா. இதற்கா, என்னை தேடிவந்து திருமணம் செய்தாய்? உடலெங்கும் வருடினாள். பல இடங்களில் ஊசி குத்திய ரணம். ஏன் இதை எனக்கு செய்தாய் வினு?

அழுதுவிடு சம்யுக்தா. இப்படி நீ இருப்பது நல்லதல்ல என்றார் ஐஸ்வர்யா. சுனிலின் நண்பர்கள் விமான சேவைக்கு பேசினார்கள். மருத்துவமனையே எல்லா சான்றிதழ்களும் தயார் செய்வார்கள். அவர்களே ஊருக்கு அனுப்புவார்கள் என்றார்கள்.

வினோத்தின் அம்மா போனில் தகவல் கேட்டு மயங்கினார். மூன்று நாட்கள் ஆகும் இந்தியா கொண்டு செல்ல என்றார்கள். சம்யுக்தாவுடன், சுனிலும் விமானத்தில் பயணித்தார். விமான நிலையத்தில் உறவினர்கள் எல்லாம் குழுமியிருந்தனர். சம்யுக்தாவை பார்தததும் கட்டிப்பிடித்து அழுதார்கள். சுனில் என்ன நடந்தது என்று மீண்டும், மீண்டும் பலரிடமும் சொல்லிக்கொண்டேயிருந்தான் அப்போதும், சம்யுக்தாவிடமிருந்து அழுகை இல்லை என்பதையெண்ணி திகைத்தான் சுனில்.

மூன்று நாட்களும் அறையில் சுருண்டிருந்தாள் சம்யுக்தா. மூன்றாம் நாள் விமானத்தில் உடல் வந்தது. எடுத்து வர அப்பாவுடன் உறவினர்கள், வினோத்தின் குடும்பம் சென்றது. அழகான மரப்பெட்டி வந்திறங்கியது. அருகில் சென்று நின்றாள் சம்யுக்தா. குழுமியிருந்தவர்கள் பெட்டியை திறந்தார்கள். வினோத்தின் உடல் முழுவதும் கழுவப்பட்டு, முகம் எல்லாம் சரிசெய்யப்பட்டிருந்தது. சவரம் செய்யப்பட்டு மீசை, புருவம் திருத்தப்பட்டிருந்தது. தலைமுடி அழகாக படிய வாரி இருந்தார்கள். முகம் ரோஸ்பவுடர் அடித்து ஒப்பனை செய்யப்பட்டிருந்தது. அழகான நீல நிற கிமானோ உடையில் சகுரா மலர்கள் மிளிர, ஒரு ஜப்பானியனை போல் இருந்தான், வினோத். வெடித்து அழுதாள் சம்யுக்தா.

- கனலி ஜனவரி மாத இதழ்


1 comment:

Write your valuable comments here friends..