Saturday, November 9, 2013

யதார்த்த சினிமாவின் பிரம்மா - மகேந்திரன் - 2

1981ல் சிவசங்கரியின் கதையை மூலமாக கொண்டு மகேந்திரன் இயக்கிய படம், நண்டு. எளிமையான கதை. அதுவே இந்த திரைப்படத்தின் பலவீனமும் கூட.



லக்னோவில் ஒரு ராஜகுடும்பத்தின் வாரிசான ராம்குமார் ஷர்மா, தனது தந்தையின் நடத்தையால் மனம் நொந்து, அவர் ஏற்பாடு செய்யும் திருமணத்தை மறுத்து, சென்னை வருகிறான். அங்கு தன்னுடன் வேலை பார்க்கும் சீதாவுடன் காதல் கொண்டு, சீதாவின் அக்கா கணவர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்கிறான்.

வழக்கமான மகேந்திரனின் நாயகர்கள் போலவே, இந்த படத்தின் நாயகனும், அன்பையும் நல்லொழுக்கத்தையும் குணநலன்களாக கொண்டிருக்கிறான். மகேந்திரனுடன் பழகியவர்கள், புரிந்து கொள்வார்கள். மெல்லிய குரலில், அதிராமல் பேசுபவனாக, ஒரு போதும் பதறாதவனாக, நல்லொழுக்கத்தை கடைபிடிப்பவனாக தொடர்ந்து வரும் மகேந்திரனின் கதைநாயகர்கள், ஒரு வகையில் மகேந்திரனை பிரதிபலிப்பவர்கள்தான். எப்போதும் இது மாதிரியான பாத்திரத்துக்கு, சரத்பாபுவை தேர்வு செய்யும் மகேந்திரன், இந்த படத்தில் ஒரு புதுமுக நடிகரை அறிமுகம் செய்கிறார். ஆனால், சரத்பாபுதான் குரல் கொடுக்கிறார். நாயகியாக உதிரிபூக்கள் அஸ்வினி, மிகை நடிப்பில்லாது, கவர்கிறார்.  சென்னை வரும் ராம்குமாருக்கு மயிலாப்பூர் அருகே ஒரு ஸ்டோர் ஹவுஸில் அறை கிடைக்கிறது. சீதாவும் அங்கு தான் வசிக்கிறாள். ஆஸ்த்மாவினால் தொல்லை அனுபவிக்கும் ராம்குமாருக்கு உதவ சீதா அவனது அறைக்கு செல்ல, மற்ற குடித்தனகாரர்கள் தப்பாக பேசுகிறார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள்.

குடித்தனகாரர்களாக, மகேந்திரனின் ஆஸ்தான நடிகர்களான, சாமிகண்ணு, செந்தாமரை, குமரிமுத்து, வெண்ணிற ஆடை மூர்த்தி போன்றவர்கள் வருகிறாகள். இவர்கள் அனைவருமே பாத்திரத்துடன் ஒன்றி இயல்பாக நடிப்பவர்கள். பழைய ராஜ்தூத் வண்டி, ஸ்டார்ட் செய்வது போல குமரிமுத்து சிரிக்க ஆரம்பித்ததும், மூர்த்தி வாயில் பலூன் வெடிக்க ஆரம்பித்ததும் பிறகு, அவர்களுடைய போதாத காலத்தில் தான். 



அன்பே உருவான ராம்குமாரின் சொந்த ஊரை பார்க்க விரும்புகிறாள் சீதா. லக்னோ செல்லும் ராம்குமாரை, கண்டு ஆனந்தத்தில் மிதக்கும் ராம்குமாரின் தாய், பேரனை பிரிய மனமில்லாமல், அவர்களை அங்கேயே தங்கி விடுமாறு கூறுகிறாள். ராம்குமாரின் தந்தையோ திரும்பவும் அவர்களை விரட்டுகிறார்.சென்னை வந்து, குழந்தை பிறக்கிறது. அக்கா கணவனே வளைகாப்பும் செய்விக்கிறான். இந்த பாத்திரபடைப்பின் தன்மை, முதலில் வில்லன் போல் அறிமுகமாகி பிறகு காமெடியன் போல் முடிவடைவது, பொருந்தாது போகிறது.

குழந்தைக்கு பெயர் சூட்டும் நாளில், ஆஸ்துமா அதிகமாகி, மருத்துவரிடம் செல்லும் ராம்குமாருக்கு, புற்றுநோய் என தெரிகிறது. ஊருக்கு கடிதம் எழுதி தெரிவிக்கிறாள் சீதா. ஆனால் ராம்குமாரின் தந்தையோ, அதை மறைத்து செத்து ஒழியட்டும் என சொல்கிறார். ராம்குமார் சென்னையில் இறக்கும் அதே தருணத்தில் ராம்குமாரின் தாயும் இறக்கிறாள். சீதா, குழந்தைக்காக வாழ்வை தொடர்வதாக படம் முடிவடைகிறது.

சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்
சிலவேளை இதைவந்து கடல் கொண்டு போகும் 

என்ற கவிதை வரிகளுக்கெற்ப, அழகிய சிறிய கவிதை போல் சீதாவும், ராம்குமாரும் தாமாகவே அமைத்து கொண்ட வாழ்க்கை, விதி எனும் மாய அரக்கனால், கருணையில்லாது அழிக்க படுகிறது.

முன்பே கூறியது போல், கதையின் எளிமையால், படம் சுவராஸ்யத்தை தக்கவைத்து கொள்ள முடியாமல் தோல்வியை தழுவியது. ஆனால், ஒரு இயக்குனராக, திரைகதை ஆசிரியனாக மகேந்திரன் ஒவ்வொரு காட்சியிலும் மிளிரத் தான் செய்கிறார். அளவான செறிவான வசனங்கள், நம்பும்படியான பாத்திர படைப்பு, யதார்த்தமான சூழல் என ஒரு நல்ல திரைபடத்திற்க்கான எல்லா இலக்கணங்களுடன் பொருந்தியே இந்த படம் அமைந்தது.

எப்போதும் அனைத்து பாத்திரங்களையும் திறம்பட, யதார்த்தத்தில் இருந்து விலகாது கவிதை போல் படமாக்கும் மகேந்திரன், இந்த படத்தில் ராம்குமாருக்கும் அவரது தந்தைக்குமான உறவை சரியாக சொல்ல தவறியிருப்பார். ராம்குமார் மீது அவ்வளவு கோபம் கொள்ள என்ன காரணம் என்பது புரியாமலே போகிறது. லக்னோ காட்சிகளில், சில இடங்களில் ராம்குமாரின் குடும்பம் தமிழ் பேசுவதும், சில இடங்களில் இந்தி பேசுவதும் மகேந்திரன் கையாண்ட ஒரு உத்தியே என நினைக்கிறேன். கதைசூழல் படி அவர்களுக்கு தமிழ் தெரியாது. எனினும், மக்களுக்கு புரிவதற்காக தமிழ் பேசுவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.


ஒரு தமிழ் படத்தில், இரண்டு இந்தி பாடல்களை முழுமையாக வைக்க மகேந்திரனால் வைக்க முடிந்த்து என்றால், கதையின் மீது இருந்த நம்பிக்கையுடன், ராஜாவின் இசை மீது இருந்த நம்பிக்கையுமே காரணம். கைஸே ககூன் என்ற இந்தி பாடல், மொழி புரியவிட்டாலும், இசையால் கட்டிபோடுகிறது. சென்னை காட்சியில், இந்தி பாடலை வைத்த மகேந்திரன், லக்னோவில் காலத்தால் அழிக்க முடியாத பாடலான அள்ளி தந்த வானம் அன்னையல்லவா”  பாடலை காட்சிபடுத்தியிருப்பார்.




மகேந்திரன் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் அசோக்குமார், வழக்கம் போல காட்சிகளை அழகாக படமாக்கியிருப்பார். இளையராஜாவும் இந்த படத்தை கைவிடவில்லை. இவ்வளவு இருந்தும், பெரிய திருப்பங்களோ, வித்தியாசமான பாத்திரங்களோ இல்லாத ஒரே காரணத்தால், தோல்வியை தழுவியது. எனினும், சக மனிதர்கள் மீதான அன்பையும், பிரதிபலன் கருதாது  உதவும் எளிமையான மனிதர்களையும், அழகாக காட்சிபடுத்தியதன் மூலம், மகேந்திரன் முயற்சிகளில் ஒரு தரமான படமாகவே, இத்திரைப்படம் திகழ்கிறது. 

1 comment:

  1. "குடித்தனகாரர்களாக, மகேந்திரனின் ஆஸ்தான நடிகர்களான, சாமிகண்ணு, செந்தாமரை, குமரிமுத்து, வெண்ணிற ஆடை மூர்த்தி போன்றவர்கள் வருகிறாகள். " இவர்களது இயல்பான நடிப்பே படத்தின் மாபெரும் ப்ளஸ் என்பேன்
    ”இந்த படத்தில் ராம்குமாருக்கும் அவரது தந்தைக்குமான உறவை சரியாக சொல்ல தவறியிருப்பார்.” இல்லை..இது போன்ற பலவற்றை பார்வையாளனின் யூகத்துக்கு விட்டு இருப்பார்... வனிதாவுக்கு லவ் லெட்டர் கொடுப்பான் ரிக்‌ஷாக்காரன்... மெயின் கதையை ஒட்டி , அங்கு அதன் தொடர்ச்சி என்னவாக இருக்கும் என்பதை நாமே யூகிக்க முடியும் என்பதால் , அதை விலாவரியாக சொல்ல மாட்டார்

    ”சில இடங்களில் இந்தி பேசுவதும் மகேந்திரன் கையாண்ட ஒரு உத்தியே ” உண்மை.... அவர்கள் தமிழில் பேசுவது போல தோன்றினாலும் வாயசைப்பு ஹிந்தியிதான் இருக்கும்.. நமக்க்கு புரிவ்தற்காகத்தான் தமிழ் என்பது நமக்கு புரியும்...
    அதே போல தமிழ் ஹிந்தி வேறுபாட்டால் காட்சி அமைக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் வசனங்கள் ஹிந்தியிலேயே இருக்கும்

    ReplyDelete

Write your valuable comments here friends..